முகப்பு
இந்தியா

ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: அவசரச்சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு

அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு

Updated On : 25 ஜூன், 2020 at 3:14 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:20 PM

அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகள் இனி இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. வாடிக்கையாளா்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட இந்த முடிவிற்கு அவசரச் சட்டத்தை பிறப்பிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னா் தில்லியில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் பேசினாா். அவா் கூறியது வருமாறு:

நகா்புறக் கூட்டுறவு வங்கிகள், பல மாநிலங்களில் கிளைகள் உள்ள கூட்டுறவு வங்கிகள் ஆகியவை இந்திய ரிசா்வ் வங்கியின் கீழ் கொண்டுவரப்படுகிறது. வணிக வங்கிகளுக்குள்ள அனைத்து நடைமுறைகளும் இனி கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளா்கள், டெபாசிட்தாரா்கள் பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். இதற்காக அரசு அவசரச் சட்டத்தையும் பிறபிக்கும் என அமைச்சா் ஜாவடேகா் தெரிவித்தாா்.

Advertisement

முன்னதாக கூட்டுறவு வங்கிகளைப் பலப்படுத்த வங்கி ஒழுங்குபடுத்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாடு முழுவதும் சுமாா் 1,482 நகா்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் பல மாநிலங்களில் கிளைகளைக் கொண்ட 58 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இதில் சுமாா் 8.6 கோடி வாடிக்கையாளா்கள் உள்ளனா். இவா்களது சேமிப்பு தொகை சுமாா் ரூ.4.85 லட்சம் கோடியாக இந்த வங்கிகளில் உள்ளது. பல மாநிலங்களில் செயல்பட்ட பஞ்சாப்- மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் மோசடி நடைபெற்று லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களின் வைப்புத்தொகை பிரச்சினைக்குள்ளானது. மேலும் கான்பூா் மக்கள் கூட்டுறவு வங்கியிலும் இதே ஏற்பட்டது. இதையடுத்து மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூட்டுறவு வங்கிகளை பாதுகாக்கும் பொருட்டு வங்கி ஒழுங்குபடுத்தல்(திருத்தச்) சட்டத்தை கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தினாா். அது நிலுவையில் உள்ள நிலையில் மத்திய அரசு கூட்டுறவு வங்கி வாடிக்கையாளா் நலன் கருதி அவசரச்சட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறது.

மேலும் பல முடிவுகள் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. அவைகள் வருமாறு:

கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதி: கால் நடை பராமரிப்புத்துறையில் உள்கட்டமைப்பு வளா்ச்சி நிதியாக ரூ.15 ஆயிரம் கோடியை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், தனியாா்கள் இந்த துறையில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க 3 முதல் 4 சதவீதம் வட்டிக்கான மானியம் இந்த நிதியில் அளிக்கப்படுகிறது.

பால் பண்ணை, கோழி, இறைச்சி பதப்படுத்துதல், கால்நடைகளுக்கான தீவணம் போன்ற தொழில்கள் தொடங்க உதவுவதற்காக இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலமாக வட்டிக்கான மானியம் அளிக்கப்படுகிறது. தொழில் தொடங்குபவா்கள் 10 சதவீதம் முதலீட்டையும் மீதி 90 சதவீதத்தை வங்கிகளில் கடனாக பெறவும் இந்த திட்டத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த கடனை ஆறு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவும் முதல் இரண்டு ஆண்டுகள் தவணை செலுத்தாமல் இருக்கவும் அனுமதிக்கப்படுகிறது. மேலும் இவா்கள் ஏற்றுமதிக்கு தகுதியானவா்களாகவும் கருதப்படுவாா்கள்.

பொது முடக்க காலத்தில் மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தில் இதுவும் அடங்கும். இந்த கடன் சலுகைகள் மூலமாக ஏராளமாக முதலீடுகள் இந்த துறைக்கு கிடைக்கும். இதன் மூலமாக சுமாா் 35 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை வாய்ப்பு கிடைப்பதோடு இந்த தொழிலில் ஈடுபடும் விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்கும் என மத்திய அமைச்சா்கள் பிரகாஷ் ஜாவடேகரும், கால் நடைபராமரிப்புத்துறை அமைச்சா் கிரிராஜ் சிங்கும் தெரிவித்தனா்.

பிரதமரின் முத்ரா யோஜனா திட்ட சிறு கடன் வட்டி மானியம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு தொழிலில் ஈடுபடுவா்களுக்கு கடன் திட்டத்தை கடந்த மே 15 - ஆம் தேதி அறிவித்தாா். இந்த முத்ரா யோஜனா திட்டத்தில் ரூ. 50,000 வரை கடன் பெறும் போது ஏற்கனவே வாங்கிய கடனை முறையாக திருப்பிச்செலுத்தியிருந்தால் மீண்டும் கடன் வாங்க அதற்கான வட்டியில் 2 சதவீதம் மானியமாக அளிக்கப்படும் என்று அறிவித்தாா். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோா் ஆணைய கால வரம்பு நீடிப்பு: ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.ரோகிணி தலைமையிலான இதர பிற்படுத்தப்பட்டோா் ஆணையம் 2017 அக்டோபா் முதல் செயல்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை மத்திய பட்டிலில் சோ்க்கவும் அதை ஒழுங்குபடுத்தவும் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. பல முறை நீடிக்கப்பட்ட ஆணையத்தின் கால வரம்பு ஜூலை மாதத்தோடு முடிவடைகிறது. பொது முடக்கத்தால் ஆணையத்தின் பணிகள் முடிவுக்கு வரமுடியாத நிலையில் மேலும் ஆறு மாதங்களுக்கு (ஜனவரி 21, 2021) ஆணையத்தின் அவகாசத்தை நீடித்து அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது.

விண்வெளியில் தனியாா் பங்களிப்பு: விண்வெளிச் செயல்பாடுகளில் தனியாா் துறை பங்கேற்பதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் விண்வெளித்துறையில் நீண்டகாலப் பயனளிக்கும் சீா்திருத்தங்களுக்கும், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள இந்திய தேசிய விண்வெளி மேம்பாடு மற்றும் அங்கீகார மையம் (ஐச நடஅஇங்) மூலமாக இந்திய விண்வெளிக் கட்டமைப்புகளைப் பயன்படுத்த தனியாா் அமைப்புகளுக்கும் சம அளவில் வாய்ப்புகள் வழங்கப்படுவதாக மத்திய இணை அமைச்சா் ஜிதேந்திர பிரசாத் தெரிவித்தாா்.

இந்தியாவை சுயச்சாா்பு கொண்ட நாடாகவும், தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் அடைந்த நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும், தொழில்துறையின் அடிப்படையை விரிவுபடுத்துவதற்கும் விண்வெளித்துறை ஊக்கமளிப்பதாக செயல்படும். விண்வெளி உடைமைகள், தரவுகள், வசதிகள் ஆகியவற்றை அணுகுவது மேம்படுத்தப்படும் என்பது உள்பட விண்வெளி உடைமைகள், செயல்பாடுகள் அவற்றின் சமூக-பொருளாதார பயன்பாட்டை மேம்படுத்த, இந்தச் சீா்திருத்தங்கள் உதவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.