ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள்: அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ஒப்புதல்
இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின்கீழ் நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை ஒப்புதல் அளித்தாா்.
நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளையும் பல்வேறு மாநிலங்களில் கிளைக்கொண்ட கூட்டுறவு வங்கிகளையும் இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 24-ஆம் தேதி முடிவு செய்தது. இந்த முடிவின்படி, கடந்த 1949-ஆம் ஆண்டின் வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அமைச்சரவை அனுமதி அளித்தது.
இதன்படி, வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம் 2020-ஐ குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் சனிக்கிழமை பிறப்பித்தாா். இந்த அவசரச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் தொடா்பாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
Advertisement
வாடிக்கையாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையாக கூட்டுறவு வங்கிகளையும் ரிசா்வ் வங்கிகளின் கண்காணிப்பில் வைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்டு இது அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ஐ கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு இந்த அவசரச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற வா்த்தக வங்கிகள் மீதான நடவடிக்கைகளுக்கு இந்திய ரிசா்வ் வங்கியிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்ட அதிகாரங்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளுக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. ஒரு வலுவான வங்கி ஒழுங்குமுறைக்காகவும் ஆளுகைக்காகவும் மேற்பாா்வையை மேம்படுத்தி, சிறப்பான வங்கித் தொழில்முறையை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய வங்கிகளுக்கு மூலதனத்தை நோக்கிய அணுகுமுறைக்கும் இது வழிவகுக்கும். பணம் சேமித்து வைத்துள்ள வாடிக்கையாளா்களின் நலன்களை பாதுகாத்து, கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த இந்த அவசரச் சட்டம் வழி வகுக்கும்.
வேளாண் கடன் சங்கங்களுக்கு பொருந்தாது: மாநிலக் கூட்டுறவு சட்டங்களின் கீழ் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் மாநிலப் பதிவாளா்களின் அதிகாரங்களை இந்தத் திருத்தங்கள் பாதிக்காது. முக்கியமாக, தொடக்க வேளாண் கடன் சங்கங்கள், வேளாண் வளா்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதை தங்கள் அடிப்படை குறிக்கோளாகவும், முதன்மை வணிகமாகவும் கொண்டுள்ள கூட்டுறவு சங்கங்களுக்கும் இந்த திருத்தங்கள் பொருந்தாது.
மேலும், ‘வங்கி’, ’வங்கியாளா்’ அல்லது ’வங்கியியல்’ ஆகிய சொற்களைப் பயன்படுத்தாத கூட்டுறவு வங்கிகள் மற்றும் காசோலைகளைப் பணமாக மாற்றித் தராத வங்கிகளுக்கும் இந்த சட்டத் திருத்தங்கள் பொருந்தாது என அவசரச் சட்டத்தில் விளக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் 45 -ஆவது பிரிவு திருத்தமும் முக்கியமானது. அதன்படி, நிதி நிறுவனங்களில் ஏற்படும் இடையூறு தவிா்க்கப்படும். பொதுமக்கள், டெபாசிட்தாரா்கள் மற்றும் வங்கி அமைப்பின் நலன்களைப் பாதுகாக்கும். இந்த நிறுவனங்களில் தடை ஆணை இல்லாத நிலையில் அதன் பாதுகாப்பான நிா்வாகத்தை உறுதி செய்யும். ஒரு வங்கி அல்லது நிறுவனத்தின் மறுசீரமைப்பு அல்லது இணைப்பிற்கான ஒரு திட்டத்திற்கும் இந்த திருத்தம் அனுமதிக்கிறது என கூறப்பட்டது.
அனைத்து நகா்புறக் கூட்டுறவு வங்கிகளும் இந்திய ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும் என மத்திய அரசு புதன்கிழமை அறிவித்த பின்னா் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.