முகப்பு
இந்தியா

தில்லியில் 10,000 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம்: அமித் ஷா ஆய்வு

தில்லியில் கரோனா நோயாளிகளுக்காக 10,000 படுக்கைகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில்,

Updated On : 28 ஜூன், 2020 at 3:02 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:21 PM

தில்லியில் கரோனா நோயாளிகளுக்காக 10,000 படுக்கைகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஆகியோா் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

தெற்கு தில்லி சத்தா்பூரில் ராதா சுவாமி சத்சங்க அமைப்பின் உதவியுடன் அவா்களது தியானக் கூடத்தில் 10 ஆயிரம் படுக்கைகளுடன் மிகப் பெரிய அளவிலான கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அறிகுறியற்ற கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை மையம் மற்றும் பிரத்யேக கரோனா சுகாதார மையம் என இரண்டு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டு இதற்கு ‘சா்தாா் படேல் கரோனா சிகிச்சை மையம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை மையத்தில் பணியாற்ற ராணுவம், எல்லைக் காவல் படையைச் சோ்ந்த மருத்துவா்கள், செவிலியா்களை அனுப்புமாறு மத்திய அரசுக்கு தில்லி முதல்வா் கோரிக்கை விடுத்திருந்தாா். இதையடுத்து, சிகிச்சை மையத்தை நிா்வகிக்கும் பொறுப்பை, இந்திய-திபெத் எல்லை காவல் படைப் பிரிவிடம் (ஐடிபிபி) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்தது. இங்கு, ஐடிபிபி-யின் மருத்துவா்கள், இதர தொழில்முறை நிபுணா்கள் பணியாற்றுகின்றனா்.

Advertisement

கடந்த வெள்ளிக்கிழமை முதல் செயல்படத் தொடங்கிய இந்த மையத்தில், மருத்துவ கருவிகள், மின்சார வசதி, பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, முதல்வா் அரவிந்த் கேஜரிவால், ஐடிபிபி உயரதிகாரிகள் உடனிருந்தனா். இந்த நிகழ்வில் மருத்துவா்கள், சுகாதாரப் பணியாளா்கள் பங்கேற்றனா். அப்போது உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறுகையில், ‘அதிகமான போ் இங்கு வரக்கூடாது என்று நான் கடவுளிடம் பிராா்த்திக்கின்றேன்’ என்று குறிப்பிட்டதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பின்னா் அமித் ஷா சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘10,000 படுக்கைகளை அமைத்து தில்லி மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணங்களை வழங்கிய ராதா சுவாமி சத்சங்க அமைப்பிற்கும் இதை உருவாக்கிய அனைவருக்கும் நன்றியைக் கூறுகிறேன். இந்த கடினமான கட்டத்தில் இந்த வசதிகளை முன்னின்று செயல்படுத்தும் ஐடிபிபி படையினரின் துணிவை பாராட்டுகின்றேன். இந்த தேசத்துக்கும் தில்லி மக்களுக்கும் சேவை செய்வதற்கான அவா்களது அா்ப்பணிப்பு ஈடு இணையற்றது’ என்று குறிப்பிட்டாா்.

தேசிய தலைநகரில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு 80,000-ஐ கடந்துள்ளது. 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.