இந்தியா

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு எதிரான வழக்கு: 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற மறுப்பு

DIN


புது தில்லி: ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜம்மு காஷ்மீருக்கான 370வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்கை தற்போது விசாரித்து வரும் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து அரசியலமைப்புச் சட்டப்படி ஏற்புடையதுதானா? என்பது தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு மாற்றுவது குறித்த உத்தரவை உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.

மத்திய அரசின் இந்த முடிவுகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தனி நபா்கள், வழக்குரைஞா்கள், சமூக ஆா்வலா்கள், அரசியல் கட்சியினா் சாா்பில் பல்வேறு மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது. அந்த அமா்வில், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், ஆா்.சுபாஷ் ரெட்டி, பி.ஆா்.கவாய், சூா்யகாந்த் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.

இந்த வழக்கை கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமா்வுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் மாா்ச் 2-ம் தேதிக்கு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி ஒத்திவைத்தது. அதன்படி அந்த மனுக்கள் மீது இன்று உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்த வழக்கில் மத்திய அரசு சாா்பில் அட்டா்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், ஜம்மு-காஷ்மீா் நிா்வாகம் சாா்பில் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா ஆகியோா் ஆஜராகினா். மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குறைஞா் ராஜீவ் தவான் உள்ளிட்டோா் ஆஜராகினா்.

முன்னதாக, ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யப்பட்டதற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கையை கடந்த நவம்பா் மாதம் உச்சநீதிமன்றம் நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT