சோனியா குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்: ஆர்எல்பி எம்பி வலியுறுத்தல்
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் இருப்பது குறித்து பரிசோதிக்க வேண்டும் என ஆர்எல்பி எம்பி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கரோனா வைரஸ் இருப்பது குறித்து பரிசோதிக்க வேண்டும் என ஆர்எல்பி எம்பி தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் நோய்த் தொற்று இந்தியாவில் இதுவரை 30 பேரை பாதித்துள்ளது. இந்த நோய்த் தொற்றால் இத்தாலியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகள் 16 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும் என ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி (ஆர்எல்பி) எம்பி ஹனுமான் பெனிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசுகையில்,
"இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இத்தாலியுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருந்துள்ளனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து ராகுல் காந்தி முன்கூட்டியே எச்சரித்திருத்ததாக காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சௌதரி முன்பு தெரிவித்தார். காந்தி குடும்பத்தினரும் இத்தாலியில் இருந்து திரும்பியிருப்பதால், அவர்களையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என மக்களவையில் மத்திய அரசை வலியுறுத்தினேன். சோனியா காந்தி இல்லத்தில் இருந்துதான் வைரஸ் நோய்த் தொற்று பரவத் தொடங்கியதா என்பது குறித்து ஒரு விசாரணை தேவைப்படுகிறது" என்றார்.
இதையடுத்து, உங்களுடைய கருத்து அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், "என்னுடைய கருத்து நீக்கப்படுவது குறித்து எனக்கு கவலை இல்லை. எனினும், நான் சோனியாவின் உடல்நலம் குறித்து கவலை கொள்கிறேன். அவர்கள் அனைவரும் தங்களது மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றார்.
முன்னதாக, இதேபோன்ற கருத்தை ஹனுமான் பெனிவால் மக்களவையிலும் பதிவு செய்தார். இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் கிளம்பின. அவைத் தலைவரும் அவரது கருத்தை அனுமதிக்கவில்லை.