கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடகத்தில் சமீபத்தில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இதில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, இடைத்தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தினேஷ் குண்டுராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதேபோன்று, எதிர்கட்சித் தலைவர் மற்றும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவிகளை சித்தராமையா ராஜினாமா செய்தார்.
தொடர்ந்து, கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கர்நாடகத்துக்கு தலைவரை நியமிக்காத காங்கிரஸ், இன்று காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவகுமாரை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
அத்துடன், செயல் தலைவர்களாக ஈஷ்வர் காண்ட்ரே, சதீஷ் ஜர்கிஹோலி, சலீம் அகமது ஆகிய மூவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ அனில் சவுத்ரி தில்லி காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.