செலவு செய்யப்படாமல் இருக்கும் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5,275 கோடியாம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் ரூ.5,275 கோடி இதுவரை செலவு செய்யப்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டிருக்கும் தொகையில் ரூ.5,275 கோடி இதுவரை செலவு செய்யப்படாமல் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதிக்காக மத்திய அரசு ரூ.53,704.75 கோடியை ஒதுக்கியுள்ளது. இதில் மார்ச் 4ம் தேதி வரை ரூ.51,267.75 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மக்களவையில் இன்று மத்திய இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.
மார்ச் 4ம் தேதி நிலவரப்படி, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கம் துறை வெளியிட்ட தகவலின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5,275.24 கோடி அளவுக்கு இன்னமும் செலவிடப்படாமல் உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும், ஆண்டு ஒன்றுக்கு தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் ரூ.5 கோடியை செலவிட்டு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.