பெங்களூரு ஹோட்டலின் துப்புரவு ஊழியர் மூலம் 30 பேருக்கு கரோனா
பெங்களூருவில் சிவாஜிநகரைச் சேர்ந்த 34 வயது துப்புரவு ஊழியர் மிகுந்த பயத்தோடு தனது நாட்களை கடத்தி வருகிறார். காரணம், அவர் மூலமாக அவருடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளத
பெங்களூரு: பெங்களூருவில் சிவாஜிநகரைச் சேர்ந்த 34 வயது துப்புரவு ஊழியர் மிகுந்த பயத்தோடு தனது நாட்களை கடத்தி வருகிறார். காரணம், அவர் மூலமாக அவருடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதிப்பினால் மருத்துவமனை ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் பணியாற்றிய துப்புரவு ஊழியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவருடன் நேரடித் தொடர்பில் இருந்த 12 பேர் உட்பட 30 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மார்ச் மாதத் துவக்கத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் தான் முதல் கரோனா நோயாளி கண்டறியப்பட்டார். இந்த நிலையில்தான் ஏப்ரல் 3ம் தேதி 42 வயது நபர் உடல் நலப் பிரச்னைக்காக அதே மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு ஏப்ரல் 4-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது. ஏப்ரல் 12ல் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் கரோனா உறுதியானது.
இதையடுத்து இந்த மருத்துவமனையைச் சேர்ந்த சில ஊழியர்கள் அருகில் உள்ள ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதற்கிடையே ஏப்ரல் 22ல் செவிலியர் ஒருவருக்கும், மே 5ல், ஹோட்டலில் பணியாற்றி வந்த துப்புரவு ஊழியருக்கும் கரோனா உறுதியானது.
அதோடு நிற்கவில்லை இந்தத் தொற்றுப் பரவல். அந்த துப்புரவு ஊழியருடன் தொடர்பில் இருந்த 30 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஹோட்டலில் தங்கியிருந்த செவிலியர் மூலமாக துப்புரவு ஊழியருக்கு கரோனா பரவியது. அந்த துப்புரவு ஊழியர், மிக நெருக்கடியான ஒரு இடத்தில் குடியிருந்துள்ளார். அவர் வசித்த குடியிருப்பில் 73 பேர் வாழ்ந்து வருகிறார்கள். அனைவருமே ஏழை மக்கள். இந்த துப்புரவு பணியாளருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த நேரத்தில், துப்புரவு ஊழியருடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் கரேனா சோதனை நடத்தப்பட்டதில், நேரடித் தொடர்பில் இருந்த 12 பேர் உட்பட 30 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும் மருத்துவமனை இருந்த பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுவிட்டது என்கிறார்கள் அதிகாரிகள்.