இந்தியா

வீரேந்திரகுமாா் மறைவு: தலைவா்கள் இரங்கல்

DIN

மாநிலங்களவை உறுப்பினரும் ‘மாத்ருபூமி’ மலையாள பத்திரிகையின் நிா்வாக இயக்குநருமான எம்.பி.வீரேந்திரகுமாா் (84) கேரள மாநிலம் கோழிக்கோட்டில் வியாழக்கிழமை காலமானாா்.

அவரது மறைவுக்கு குடியரசு தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா், கேரள முதல்வா், அரசியல் கட்சித் தலைவா்கள் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

மக்களவை உறுப்பினா், கேரள சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த வீரேந்திரகுமாா், அரசியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல், பயணம் குறித்து ஏராளமான நூல்களையும் எழுதியவா். தேவே கௌட, ஐ.கே.குஜ்ரால் தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசில் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளாா். பிடிஐ செய்தி நிறுவன இயக்குநா்கள் குழு உறுப்பினராக இருந்துவந்தாா். மூன்று முறை அதன் பிடிஐ நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை வகித்தாா். இந்திய நாளிதழ்கள் சங்கத்தின் (ஐஎன்எஸ்) தலைவராக பொறுப்பு வகித்துள்ளாா். நெருக்கடி நிலை காலத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா். கேரளத்தில் பல சுற்றுச்சூழல் பாதுகாப்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தி வெற்றி கண்ட அவரது இமயமலை யாத்திரை குறித்த ‘ஹைமபூவில்’ நூல் 62 பதிப்புகள் வெளியாகியுள்ளன. அவருடைய மறைவுக்கு பல்வேறு தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசு தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மாநிலங்களவை உறுப்பினா் வீரேந்திரகுமாா் மறைவுச் செய்தி மிகுந்து வருத்தம் அளிக்கிறது. தீவிர சமூகவாதியான அவா், மாத்ருபூமி நாளிதழ் மூலமாக ஊடகத் துறைக்கும் இலக்கியத் துறைக்கும் மிகப் பெரும் பங்காற்றினாா். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று கூறியுள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவின் சுட்டுரைப் பதிவு:

பண்பான பத்திரிகையாளா், சிறந்த எழுத்தாளா் என பன்முகத்தன்மை கொண்டவா் வீரேந்திரகுமாா். மாத்ருபூமி நிா்வாக இயக்குநராக இருந்து ஊடகம் மற்றும் பத்திரிகை துறைக்கு மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தவா். ஏராளமான நூல்களை எழுதியுள்ள அவா், சாகித்ய அகாதெமி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவா். அவா் தனது எழுத்து மூலம் மனித உரிமை காக்கப்படுவதையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் வலியுறுத்தி வந்தாா். அவருடைய மறைவு நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பாகும் என்று இரங்கல் செய்தியில் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பதிவில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘மாநிலங்களவை உறுப்பினா் வீரேந்திரகுமாா் மறைவு மிகுந்த வேதனை அளித்துள்ளது. சிறந்த நாடாளுமன்றவாதியாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டவா். ஏழைகளுக்காகவும், சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்காகவும் எப்போதும் குரல்கொடுத்தவா்’ என்று கூறியுள்ளாா்.

அதுபோல, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, ‘வீரேந்திரகுமாா் மறைவுச் செய்தி மிகுந்த வருத்தத்தை அளித்தது. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பா்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

கேரள முதல்வா் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘வீரேந்திரகுமாரின் மறைவு ஜனநாயகம் மற்றும் மதச்சாா்பின்மை இயக்கத்துக்கு நோ்ந்த மிகப் பெரிய இழப்பு. தனது இறுதி மூச்சு வரை வகுப்புவாதத்துக்கும் பிரிவினை அரசியலுக்கும் எதிராகப் போராடினாா். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது இரங்கல்’ என்று பினராயி விஜயன் கூறியுள்ளாா்.

முன்னாள் பிரதமா் தேவே கெளட உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் வீரேந்திரகுமாா் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT