'பிகாரில் மகா கூட்டணித் தோல்விக்கு காங்கிரஸே பொறுப்பு'
பிகாரில் மகா கூட்டணி தோல்வியடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று பாஜக விமர்சித்துள்ளது.
உத்தரப்பிரதேசம்: பிகாரில் மகா கூட்டணி தோல்வியடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று பாஜக விமர்சித்துள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பிகாரில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை கடந்த செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. இதில் பாஜக - ஐக்கிய ஜனதா தளக் கூட்டணி வெற்றி பெற்றது. ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் சேர்ந்து அமைத்த மகா கூட்டணி தோல்வியடைந்தது.
இந்த நிலையில், பிகாரில் மகா கூட்டணி தோல்வியடைந்ததற்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு என்று பாஜக தலைவரும், உத்தரப்பிரதேச மாநில நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சருமான ஆனந்த் ஸ்வரூப் சுக்லா விமர்சித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் இது குறித்து மேலும் பேசிய அவர், ''சாதி, ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்ய விரும்பியவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி 70 இடங்களைத் தேர்வு செய்து போட்டியிட்டும் 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றார்.
தேஜஸ்வினி யாதவ் மற்றும் ஆர்.ஜே.டி. கட்சி தோல்வியடைந்ததற்காக முழு பொறுப்பும் காங்கிரஸ் மற்றும் ராகுல்காந்தியையே சேரும்'' என்று விமர்சித்தார்.