தில்லி மருத்துவமனைகளில் வென்டிலேட்டர் படுக்கைகள் நிரம்பின
தில்லியில் கரோனா அச்சுறுத்தலுக்கிடையே வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனா அச்சுறுத்தலுக்கிடையே வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளுக்குப் பல்வேறு மருத்துவமனைகளில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளிர்காலம் நெருங்கிவருவதால் காற்று மாசு மிகவும் மோசமடைந்து மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்படுவதால், அதிக அளவிலான மக்கள் வென்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
தில்லி அரசின் இணையதள கரோனா பட்டியலில் வியாழக்கிழமை 12.30 மணி நிலவரப்படி கரோனா பிரிவில் 131 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன.
ராஜீவ் காந்தி சிறப்பு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைப் பிரிவில் இருந்த 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளும் நிரம்பின. எல்.என்.ஜே.பி. மருத்துவமனையில் இருந்த 200 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 7 படுக்கைகள் மட்டுமே காலியாக இருந்தன.
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்த 71 தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளில் 7 படுக்கைகளும், சப்தர்ஜங் மருத்துவமனையிலுள்ள 65 ஐ.சியு. படுக்கைகளில் 7 படுக்கைகளும், சர் கங்கா ராம் மருத்துவமனையிலுள்ள 45 ஐ.சி.யு. படுக்கைகளில் 8 படுக்கைகளும் காலியாக இருந்தன.
ஆர்.எம்.எல். மருத்துவமனையில் ஒரு படுக்கையும், பி.எஸ்.ஏ. மருத்துவமனையில் 9 படுக்கைகளும், எஸ்.ஜி.எம்.எச் மருத்துவமனையில் 4 படுக்கைகளும் காலியாக இருந்தன.
தில்லி நகரில் கரோனா அல்லாத பிற சிகிச்சைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கை வசதிகளும் மருத்துவமனைகளில் நிரம்பிவருகின்றன.