ஜன. - பிப்.யில் கரோனா 2-வது அலை: எச்சரிக்கும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை
தொடர்ந்து தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
புனே: நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக கரோனா தொற்றுப் பரவல் குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் காட்டினாலும், கரோனா பரிசோதனை செய்வதைக் குறைக்காமல், தொடர்ந்து தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும் என்று மகாராஷ்டிர சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
மாநில சுகாதாரத் துறை இயக்குநரகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தல் மற்றும் சுற்றறிக்கையில், மகாராஷ்டிரத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை ஜனவரி - பிப்ரவரி மாதங்கள் ஏற்படக் கூடும். எனவே, மாநிலத்தில் எந்தக் காரணத்தைக் கொண்டும் கரோனா பரிசோதனைக் குறைக்கவோ, அலட்சியம் காட்டவோ வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, இனி சூப்பர் கரோனா தொற்றாளர்களாக இருக்கும் காய்கறி மற்றம் மளிகைக் கடை உரிமையாளர்கள், வீடு வீடாகச் சென்று சேவை அளிப்போர், போக்குவரத்துத் துறையில் பணியாற்றுவோர், குடியிருப்புகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவோர், காவல்துறை, ஊர்காவல்படையினர் போன்றவர்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுபோன்றவர்களுக்கு அறிகுறி தென்பட்டதும், கரோனா பரிசோதனை மேற்கொண்டால், இரண்டாவது அலை வீசுவதை முன்கூட்டியே தடுக்க முடியும் என்றும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலக் குறைவு, சளி தொந்தரவு போன்றவை இருக்கும் நபர்களை கண்டறிவதில் முன்பு செயல்பட்டதைப் போன்றே தீவிர கவனத்துடன் செயல்பட வேண்டும், வீடு வீடாகச் சென்று காய்ச்சல் இருக்கும் நபர்களைக் கண்டறிய வேண்டும் என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.