உ.பி.: 'காந்திஜெயந்தியையொட்டி அமைதிவழிப் போராட்டம்'
காந்தி ஜெயந்தியையொட்டி உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராட சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது.
காந்தி ஜெயந்தியையொட்டி உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராட சமாஜ்வாதி கட்சி முடிவு செய்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் நிலவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், வேலைவாய்ப்பின்மை, ஊழல் உள்ளிட்டவற்றை கண்டித்து போராட சமாஜ்வாதி திட்டமிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதனைக் கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) சமாஜ்வாதி கட்சியினர் முதல்வர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்தை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை தடியடி நடத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே நாளை காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் உத்தரப்பிரதேச அரசுக்கு எதிராக அமைதி வழியில் போராட முடிவு செய்துள்ளதாக சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
காந்திஜெயந்தியையொட்டி இரண்டு மணிநேரம் மெளனப் போராட்டம் கடைப்பிடிக்கப்படும். மேலும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள காந்தி சிலை முன்பு உத்தரப்பிரதேச அரசின் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, வேலைவாய்ப்பின்மை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, விவசாய சீர்திருத்தச் சட்டம் ஆகியவற்றிற்கு எதிராக சமாஜ்வாதி கட்சியினர் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று அகிலேஷ் யாதவ் கேட்டுக்கொண்டார்.