ஹாத்ராஸ் எல்லையில் திரிணாமுல் எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் நுழைய முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
இதில் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதில், நாடாளுமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் கீழே தள்ளினர். இதனைத்தொடர்ந்து டெரிக் ஓபிரையன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் அசம்பாவிதங்களை தவிர்கும் பொருட்டு ஹாதராஸ் பகுதியில் உத்தரபிரதேச அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதனிடையே பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் ஓபிரையன், ககோலி கோஷ் தஸ்திதர், பிரதிமா மொண்டல் மற்றும் மம்தா தாக்கூர் உள்ளிட்டோர் உத்தரப்பிரதேசம் சென்றனர்.
தில்லியிலிருந்து தங்களது சொந்த வாகனத்தில் புறப்பட்ட அவர்கள் ஹாத்ராஸ் பகுதிக்கு 1.5 கிலோமீட்டர் அருகே உள்ள பூல்காரி கிராமத்தில் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் நடைபயணமாக செல்ல முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து கீழே தள்ளினர். இதனையடுத்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று (வியாழக்கிழமை) காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உத்தரப்பிரதேச காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.