உ.பி.யில் சமாஜ்வாதியினர் பேரணி; காவல்துறை தடியடி
உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து பேரணியில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.
உத்தரப்பிரதேசத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமையை கண்டித்து பேரணியில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினரை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு நிலவியது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம் பெண் ஆதிக்க சமூகத்தினரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் பல்வேறு பெண்கள் அமைப்பினரும், அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. அந்தவகையில் இதனைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியினர் பேரணியில் ஈடுபட்டு காந்தி சிலை அருகே அமைதிப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியிலிருந்து சமாஜ்வாதி கட்சியினர் காந்தியின் படங்களை ஏந்தியவாறு முகக்கவசம் அணிந்து கொண்டு பேரணியாக புறப்பட்டனர்.
அப்போது காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சமாஜ்வாதி தொண்டர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல்துறையினர் தடியடி நடத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சமாஜ்வாதி கட்சியினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.