தவறவிட்ட மாணவர்களுக்கு அக். 14ல் நீட் தேர்வு: உச்ச நீதிமன்றம்
நீட் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்த வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வருகிற அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா பாதிப்பு மற்றும் பொதுமுடக்கம் காரணமாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் பலர் தேர்வினை எழுத முடியவில்லை. எனவே, கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு தேர்வு நடத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில், நீட் தேர்வை எழுதத் தவறிய மாணவர்களுக்கு அக். 14 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட வேண்டும் என தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கடந்த செப். 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்வின் முடிவுகள் இன்று வெளியாகும் என கூறப்படும் நிலையில், அக்டோபர் 16 ஆம் தேதி தேர்வு முடிவினை வெளியிட தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எனினும், தேர்வு எழுதாதவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்துவது குறித்து தேசிய தேர்வு முகமை ஆலோசித்து முடிவெடுக்கும் என்று தெரிகிறது.