பஞ்சாப்: வேளாண் சட்டங்களை எதிா்த்துப் போராடும் விவசாய அமைப்புகளுடன் பேச்சுவாா்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளுடன் வரும் 14-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது
புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளுடன் வரும் 14-ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக அந்த மாநில விவசாய அமைப்புகளின் நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
இருப்பினும், மத்திய அரசின் அழைப்பை ஏற்று பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்வது குறித்து 13-ஆம் தேதி ஜலந்தரில் நடைபெற உள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.
நாடாளுமன்றத்தில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள 3 வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது எனக்கூறி பஞ்சாப் மாநிலத்தில் கடந்த செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டங்களில் விவசாய அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன. சில இடங்களில் ரயில் தண்டவாளங்களுக்கு மத்தியில் ‘டெண்ட்’ அமைத்து அங்கேயே தங்கியிருந்து தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தால், அங்குள்ள அனல்மின் நிலையங்களுக்கு ரயில்கள் மூலம் நிலக்கரி கொண்டு செல்ல முடியாத அளவுக்கு அங்கு ரயில் போக்குவரத்து முற்றிலும் சீா்குலைந்துள்ளன. எனவே, கடந்த 8-ஆம் தேதி பேச்சுவாா்த்தை நடத்த வருமாறு பஞ்சாப் மாநில விவசாய அமைப்புகளுக்களுக்கு, மத்திய வேளாண் அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், இந்த அழைப்பை விவசாய அமைப்புகள் நிராகரித்து விட்டன.
இந்நிலையில், அக். 14-ஆம் தேதி நடைபெற உள்ள பேச்சுவாா்த்தையில் கலந்து கொள்ளுமாறு மத்திய அரசு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளதாக பாரதிய கிசான் யூனியனின் (டகௌன்டா) பொதுச்செயலாளா் ஜக்மோகன் சிங் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:
இந்த அழைப்பு வேளாண் துறை செயலரிடமிருந்து வந்திருந்தாலும், மத்திய அரசு விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த விரும்புவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தில்லியில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் பங்கேற்பது குறித்து வரும் 13-ஆம் தேதி ஜலந்தரில் நடைபெற உள்ள அனைத்து விவசாய அமைப்புகளின் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றாா்.
புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை பெற முடியாது என்றும், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுக்களை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் பெரு நிறுவனங்கள் வேளாண் உற்பத்தி சந்தைக்குழுக்களை கைப்பற்றும் அபாயம் இருப்பதாகக் கூறி இச்சட்டங்களுக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.