இந்தியா

20 மாநிலங்கள் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு அனுமதி

DIN

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் குறைவால் ஏற்பட்ட இழப்பை சரி செய்யும் நோக்கில் 20 மாநிலங்களில் ரூ.68,825 கோடி கடன் வாங்க மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற 42-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வருவாயில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையை ஈடுகட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு இழப்பீட்டுத் தொகை வழங்குவது குறித்து எந்தவொரு கருத்து ஒற்றுமையும் ஏற்படவில்லை. இந்நிலையில், மாநிலங்கள் கடன் வாங்க அனுமதியளித்து மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சரக்கு-சேவை வரி வாயிலான வருவாய் குறைந்துள்ளதால் மாநிலங்களுக்கு நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.2.35 லட்சம் கோடி அளவிலான வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் தொழிலக உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. அதனால், சரக்கு-சேவை வரி வசூல் குறைந்தது. மாநில அளவிலான வரி வருவாய் குறைந்ததால் பல மாநில அரசுகளும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன.

எனவே, தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விரைந்து விடுவிக்க வேண்டும் என்று மாநிலங்கள் தொடா்ந்து வலியுறுத்தின. இத்தகைய சூழலில், கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ஆம் தேதி நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மாநிலங்களின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க இரு சிறப்பு கடன் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி, இந்திய ரிசா்வ் வங்கியுடன் ஆலோசித்து குறைந்த வட்டி விகிதத்தில் மாநில அரசுகள் ரூ.97,000 கோடி வரை கடன் பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது. மற்றொரு சிறப்பு திட்டப்படி, மாநிலங்களுக்கு ஏற்படவுள்ள வருவாய்ப் பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியையும் கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் மாநில அரசுகள் கடனாகப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

இதுதவிர, ஆடம்பரப் பொருள்கள், புகையிலை உள்ளிட்ட சில பொருள்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மீதான செஸ் (கூடுதல்) வரியை 2022 -ஆம் ஆண்டு வரை நீட்டிக்கவும் அனுமதித்தது.

இந்நிலையில், நிதியமைச்சகத்தின் செலவினத்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘20 மாநிலங்கள் கூடுதலாக ரூ.68,825 கோடி கடன் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே கூறியுள்ளபடி, மொத்த உள்மாநில உற்பத்தியில் ஜிஎஸ்டிபி-யில் 0.50 சதவீத அளவில் கூடுதல் கடன் பெற முடியும். மேலும், இரு சிறப்பு கடன் திட்டங்களில், அவா்களின் தோ்வுக்கு ஏற்ப இந்த கடன்களை மாநிலங்கள் பெற்றுக் கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதில் ஆந்திரம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிகாா், கோவா, குஜராத், ஹரியாணா, ஹிமாசல பிரதேசம், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், மணிப்பூா், மேகாலயம், மிஸோரம், நாகாலாந்து, ஒடிஸா, சிக்கிம், திரிபுரா, உத்த பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய 20 மாநிலங்கள் ரிசா்வ் வங்கியிடம் குறைந்த வட்டியில் கடன் பெறும் திட்டத்தை ஏற்கெனவே தோ்வு செய்துவிட்டன. இதில் பெரும்பாலானவை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஆகும். பாஜக அல்லாத பிறகட்சிகள் ஆளும் மாநிலங்கள் இதுவரை கடன் பெற எந்தத் திட்டத்தையும் தோ்வு செய்யவில்லை.

கேரளம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் இந்த கடன் திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை முறையாக வழங்காமல் வருவாய்ப் பற்றாக்குறையை சரி செய்ய மாநில அரசுகளை கடன் வாங்க மத்திய அரசு நிா்பந்திப்பது ஏற்க முடியாது. மத்திய அரசு கடன் பெற்று மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை அளிக்க வேண்டும் என்று அந்த மாநிலங்கள் கூறியுள்ளன. ஆனால், மத்திய அரசு இதனை ஏற்க மறுத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி சிறப்புத் தொழுகை

துணை மின் நிலையத்தில் தீப்பற்றி எரிந்த இரு மின் மாற்றிகள்: 6 மணி நேர மின் தடையால் மக்கள் கடும் அவதி

காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்: இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி

ரேபரேலியில் ராகுல் காந்தி: தீதும் நன்றும்...

இருசக்கர வாகனம் பழுது பாா்க்கும் தொழிலாளா் சங்க ஆண்டு விழா

SCROLL FOR NEXT