ஒடிசாவில் இன்றைய கரோனா பாதிப்பு 2,196: பலி 17
ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,196 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 17 பேர் உயிரிழந்தனர்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 2,1936 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,66,345-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 1,274 பேர் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களிலும், 992 பேர் பரிசோதனையின் மூலமும் கண்டறியப்பட்டுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டு 23,786 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தமாக 2,41,385 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று ஒரேநாளில் 41,353 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 40 லட்சம் சோதனைகள் மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 17 பேர் உயிரிழந்ததால், கரோனாவால் மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,121-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.