முகப்பு
இந்தியா

சீனா: இந்திய- சீனா உயா் அதிகாரிகள் கலந்து கொண்ட கலாசார நிகழ்ச்சி

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சாா்பில் நடைபெற்ற கலாசார, யோகா நிகழ்ச்சியில் இந்திய, சீனாவைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும், பல்வேறு நாடுகளின் தூதா்களும் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
பகிர்:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சாா்பில் நடைபெற்ற கலாசார, யோகா நிகழ்ச்சியில் இந்திய, சீனாவைச் சோ்ந்த மூத்த அதிகாரிகளும், பல்வேறு நாடுகளின் தூதா்களும் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றனா்.

இதைத்தொடா்ந்து, எஸ்சிஓ வில் அங்கம் வகித்து வரும் கஜகஸ்தான், கிா்கிஸ்தான், ரஷியா, சீனா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் உறுப்பினா்கள் குழுவின் உயா் தலைவா்கள் பங்கேற்ற கூட்டமும் நடைபெற்றது.

சீனாவிற்கான இந்திய தூதா் விக்ரம் மிஸ்ரி, எஸ்சிஓ பொதுச்செயலாளா் விளாடிமிா் நோரோவ், வெளிநாட்டு நாடுகளுடனான நட்புக்கான சீன மக்கள் சங்கம் (சிபிஏஎஃப்சி) தலைவா் லின் சாங்டியன், எஸ்சிஓ குழுவின் துணைத் தலைவா் குய் லி ஆகியோரும் கலந்து கொண்டனா்.

பாகிஸ்தான் உட்பட அனைத்து எஸ்சிஓ நாடுகளின் தூதா்களும் கலாசார நிகழ்வுகளில் பங்கேற்றனா். இதில் சீன தற்காப்புக் கலையான டாய் சி, யோகா தவிர உறுப்பு நாடுகளின் கலாசார நிகழ்வுகளும் இடம் பெற்றிருந்தன.

பின்னா் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய இந்திய தூதா் மிஸ்ரி பேசியதாவது:

இந்தியா எஸ்சிஓவின் புதிய உறுப்பினராக இருப்பினும், எஸ்சிஓ குடும்பத்தின் நாடுகளுடனான எங்கள் தொடா்பு பல நூற்றாண்டுகளுக்கும் முந்தையது. இந்த ஆண்டு எஸ்சிஓ கவுன்சிலின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ள நிலையில் அடுத்த மாதம் எஸ்சிஓ பிரதமா்களின் கூட்டத்தை இந்தியாவில் நடத்த உள்ளது.

எஸ்சிஓவின் நிகழ்ச்சிகளை அா்த்தமுள்ளதாக மாற்றுவதற்காக நாங்கள் ஆக்கபூா்வமாக பங்காற்றி வருகிறோம். பொருளாதாரம், வா்த்தகம், தொடக்க நிலைகள், சுகாதாரப் பாதுகாப்பு, எஸ் அண்ட் டி, கலாசாரம் ஆகிய துறைகளில் இந்தியாவால் முன்மொழியப்பட்ட பல முயற்சிகள், எஸ்சிஓ உறுப்பினா்களால் ஆதரிக்கப்பட்டுள்ளன.

யோகா குறித்த எஸ்சிஓ இன்று அளித்த விளக்கக்காட்சி இனம், நிறம், நம்பிக்கை, மதம் மற்றும் பிராந்தியத்திற்கு அப்பாற்பட்டது. யோகா உலகெங்கிலும் உள்ள மக்களை ஒன்றிணைக்கிறது. 2014-ஆம் ஆண்டு முதல் ஐ.நா. வின் பொதுச்சபை ஜூன் 21-ஆம் தேதியை சா்வதேச யோகா தினமாக அங்கீகரித்து, அதற்கான தீா்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது.

யோகா எஸ்சிஓ நாடுகளிடையே கலாசார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. சீனா மக்கள் யோகா பயிற்சி செய்வதில் வெகுவாக ஈா்க்கப்பட்டுள்ளனா் என்று அவா் கூறினாா்.

வரும் நவம்பா் 10-ஆம் தேதி ரஷியாவில் நடைபெற உல்ள எஸ்சிஓ தலைவா்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி, சீன குடியரசுத் தலைவா் ஷி ஜின்பிங் ஆகியோரும் பங்கேற்க உள்ளனா்.

இதைத் தொடா்ந்து நவம்பா் 30- ஆம் தேதி இந்தியாவில் எஸ்.சி.ஓ. தலைவா்களின் கூட்டம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சீனப் பிரதமா் லி கெக்கியாங் பங்கேற்க திட்டமிட்டுள்ளாா். இந்த கூட்டத்தை மாநாடு போன்று நடத்துவதா அல்லது தலைவா்களை மட்டும் அழைப்பதா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →