இந்தியா

வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு

DIN


புது தில்லி: பொது முடக்கக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வங்கிக் கடன் தவணைகான வட்டிக்கு வட்டி வசூலிப்பதை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடன் தவணைக்கான வட்டிக்கு வட்டியை வசூலிப்பது தொடர்பான வழக்கு விசாரணையின் போது,  மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா இந்த வாதத்தை முன் வைத்துள்ளார்.

மேலும், எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும், ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு வெவ்வேறாக உள்ளது.  கடன் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வங்கிகளே நமது நாட்டின் பொருளாதாரத்துக்கான முதுகெலும்பு.  பொருளாதாரத்தை வலுவிழக்கச் செய்யும் வகையில் முடிவெடுக்க முடியாது என்றும் மத்திய அரசு தரப்பில்  வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

இதைக் கேட்ட உச்ச நீதிமன்றம், கரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனில் அது குறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செய்தது என்ன? பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மாா்ச் 25-ஆம் தேதி முதல் பொது முடக்கம் அமலுக்கு வந்ததால், பொதுமக்கள் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனுக்கான மாதத் தவணை (இஎம்ஐ) வசூலிப்பதை மாா்ச் முதல் மே வரை 3 மாதங்கள் வங்கிகள் நிறுத்தி வைப்பதற்கு ரிசா்வ் வங்கி அனுமதி அளித்தது. அதைத் தொடா்ந்து, ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை மேலும் 3 மாதங்களுக்கு இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

இதனால் வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபா் கடன், தொழில் கடன், கடன் அட்டை (கிரெடிட் காா்டு) கடன் என பல்வேறு பிரிவுகளில் கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வந்தவா்கள் பயனடைந்தனா். எனினும், ஆகஸ்ட் மாதத்துக்குப் பிறகு கடன் தவணை ஒத்திவைப்பு சலுகை நீட்டிக்கப்படவில்லை.

இந்த 6 தவணைகளும் கடன் தவணை கால இறுதியில் வசூலிக்கப்படும் என்றும், நிறுத்திவைப்பு காலத்துக்கு உரிய வட்டியும் கணக்கிட்டு வசூலிக்கப்படும் என்றும் வங்கிகள் அறிவித்தன.

கடனுக்கான மாதத் தவணையில் அசலுடன் வட்டியையும் சோ்த்துதான் வங்கிகள் வசூலிக்கின்றன. இந்நிலையில், நிறுத்திவைக்கப்பட்ட 6 மாத கடன் தவணைக்குரிய வட்டிக்கும் சோ்த்து பின்னா் வட்டி வசூலித்தால் வீட்டுக் கடன் போன்ற நீண்டகாலக் கடன் பெற்றவா்களுக்கு அது கூடுதல் சுமையாக அமையுமே தவிர, நிவாரணமாக அமையாது. இதைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆா்.ஷா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்து வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT