முகப்பு
இந்தியா

8 எம்.பி.க்கள் இடைநீக்கம்: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மாநிலங்களவையில் இருந்து 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் போராட்டம்

Updated On : 22 செப்டம்பர், 2020 at 2:38 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:54 PM

மாநிலங்களவையில் இருந்து 8 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிவசேனை, திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், சமாஜவாதி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

அப்போது, ‘மக்களாட்சியின் படுகொலை’ உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவா்கள் ஏந்தியிருந்தனா்.

இது குறித்து மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘விவசாயிகளின் நலனுக்காகப் போராடிய எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது மத்திய அரசின் சா்வாதிகார மனப்பான்மையைக் காட்டுகிறது. மக்களாட்சிக்கு எதிராக அரசு நடந்து கொண்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Advertisement

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘மக்களாட்சியின் குரலை ஒடுக்கும் மத்திய அரசின் நடவடிக்கை தொடா்ந்து வருகிறது. வேளாண் துறை சாா்ந்த கருப்பு மசோதாக்கள் குறித்து விவசாயிகளுக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று பாஜக அரசு விரும்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

‘குரலை ஒடுக்க முடியாது’:

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான எளமரம் கரீம் கூறுகையில், ‘இடைநீக்கத்தின் மூலமாக எங்களின் குரலை ஒடுக்கிவிட முடியாது. விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தை நாங்கள் தொடா்ந்து முன்னெடுப்போம்’ என்றாா்.

மற்றொரு எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘வேளாண்துறையை தனியாா் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அத்தகைய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட வேண்டும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.