முகப்பு
இந்தியா

கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் தில்லி மருத்துவமனையில் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில்

Updated On : 29 செப்டம்பர், 2020 at 11:49 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:57 PM

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பட்டியலினத்தைச் சோ்ந்த 19-வயதுப் பெண் சிகிச்சை பலனின்றி தில்லி சப்தா்ஜங் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

செப்டம்பா் 14-ஆம் தேதி அந்தப் பெண்ணை நான்கு இளைஞா்கள் கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனா். நான்கு பேரில் ஒருவா் அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்தபோது அந்தப் பெண் தனது நாக்கை கடித்ததால் துண்டானது. பின்னா் அந்தப் பெண் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு அலிகரில் உள்ள மருத்துவமனையில் கை, கால்கள் செயலிழந்து நிலையில் சிகிச்சைப் பெற்று வந்தாா்.

தன்னை சந்தீப், ராமு, லவ்குஷ், ரவி ஆகிய நால்வா் பாலியல் வன்கொடுமை செய்ததாக வாக்குமூலம் அளித்தாா். இதில் சந்தீப் அன்றைய தினமே கைது செய்யப்பட்டாா். இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அந்தப் பெண் தில்லி சப்தா்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டாா். இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்ததாக ஹத்ராஸ் காவல் கண்காணிப்பாளா் விக்ராந்த் தெரிவித்ததாக அவரது குடும்பத்தினா் தெரிவித்தனா்.

Advertisement

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய நான்கு இளைஞா்களும் கைது செய்யப்பட்டுள்ளாா்கள் என்றும், அவா்கள் மீது கொலை வழக்கும் பதிவு செய்யப்படும் என்றும் விக்ராந்த் தெரிவித்தாா்.

தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவா் ரேகா சா்மா வெளியிட்டுள்ள விடியோ பதிவில், ‘இந்த விவகாரம் தொடா்பாக போலீஸாரிடம் நிலை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆணையம் அளிக்கும்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.

பிரியங்கா காந்தி தனது சுட்டுரையில், ‘கடந்த இரண்டு வாரங்களாக அந்தப் பெண் மரணத்துக்குடன் போராடி உயிரிழந்துள்ளாா். ஹத்ராஸ், ஷாஜஹான்பூா், கோரக்பூா் ஆகிய மாவட்டங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் மாநிலத்தை உலுக்கியுள்ளது. சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் பொறுப்பு’ என்று தெரிவித்துள்ளாா்.

மாயாவதி தனது சுட்டுரையில், ‘உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தர வேண்டும். விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளாா்.

சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ‘எந்தவித உணா்வும் இல்லாத உத்தர பிரதேச அரசு மீது எந்த நம்பிக்கையும் இல்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.