தெலங்கானா - சட்டீஸ்கர்.. 100 கி.மீ., தொடர்ந்து 3 நாள்கள் நடந்தே வந்த சிறுமி மரணம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.
ஊரடங்கு உத்தரவு காரணமாக தெலங்கானாவில் இருந்து சட்டீஸ்கர் நோக்கி தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்தார்.
ஜமாலோ மட்கம் என்ற 12 வயது சிறுமி தொடர்ந்து 100 கி.மீ.க்கு மேல் வெயிலில் நடந்து வந்ததால் உடலில் தண்ணீர் உள்ளிட்ட சக்துகளை இழந்து மரணம் அடைந்ததாக பிஜப்பூர் முதன்மை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், சிறுமியின் உடற்கூறு ஆய்வு முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கரைச் சேர்ந்த இந்த சிறுமி உட்பட 11 பேர் கொண்ட குழு, மிளகாய் தோட்டத்தில் வேலை செய்ய தெலங்கானாவுக்கு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த 15ம் தேதி தெலங்கானாவில் இருந்து சொந்த ஊருக்கு இவர்கள் புறப்பட்டனர். போக்குவரத்து வசதி இல்லாததால் தொடர்ந்து 3 நாட்களாக இவர்கள் நடந்தே வந்துள்ளனர். இந்த நிலையில், தான் அந்த சிறுமி சுருண்டு விழுந்து மரணம் அடைந்துள்ளார் என்று மருத்துவர் புஜாரி தெரிவித்துள்ளார்.
Advertisement
போதிய உணவு கிடைக்காமல், நீர்ச்சத்து குறைந்து சிறுமி மரணம் அடைந்திருக்கக் கூடும் என்று கருதுவதாகவும் அவர் கூறினார். சிறுமியின் உடல் பத்திரப்படுத்தப்பட்டு, விசாரணை நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே சிறுமி ஜமாலோவின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண உதவி அளிப்பதாக சட்டீஸ்கர் முதல்வர் அறிவித்துள்ளார்.