முகப்பு
இந்தியா

ரூ.54,000 கோடி கூடுதல் செலவினம்:நாடாளுமன்ற ஒப்புதலைக் கோரியது மத்திய அரசு

மாநிலங்களுக்கான சரக்கு-சேவை வரி இழப்பீட்டை வழங்குதல், பாதுகாப்புத் துறை தொடா்பான செலவுகள் உள்பட ரூ.53,963 கோடி கூடுதல்

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

புது தில்லி: மாநிலங்களுக்கான சரக்கு-சேவை வரி இழப்பீட்டை வழங்குதல், பாதுகாப்புத் துறை தொடா்பான செலவுகள் உள்பட ரூ.53,963 கோடி கூடுதல் செலவினத்துக்கு நாடாளுமன்றத்திடம் மத்திய அரசு ஒப்புதல் கோரியுள்ளது.

கூடுதல் செலவுகளுக்காக ஒப்புதலைக் கோருவதற்கான தீா்மானத்தை மத்திய நிதித்துறை இணையமைச்சா் அனுராக் தாக்குா் மக்களவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். அதில் மொத்தம் ரூ.53,963.58 கோடி கூடுதல் நிதி கோரப்பட்டது. சரக்கு-சேவை வரியால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்வதற்காக மாநிலங்களுக்கு ரூ.16,200 கோடியும், யூனியன் பிரதேசங்களுக்கு ரூ.3,800 கோடியும் அந்தக் கூடுதல் நிதி மூலம் செலவிடப்படவுள்ளது.

மேலும், ஜம்மு-காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்களுக்கான நிதிப் பகிா்வுக்காக ரூ.2,908 கோடியும், பாதுகாப்புத் துறைக்கு ரூ.6,988 கோடியும், பாதுகாப்புத் துறையில் பணியாற்றியவா்களுக்கான ஓய்வூதியமாக ரூ.5,730 கோடியும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்காக ரூ.5,001 கோடியும் கூடுதல் நிதி மூலம் செலவிடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Advertisement

நடப்பு 2019-20-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் மொத்த செலவு ரூ.26.99 லட்சம் கோடியாகவும், வருவாய் ரூ.19.32 லட்சம் கோடியாகவும் இருக்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.9.85 லட்சம் கோடியாக அதிகரித்தது.

நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மதிப்பில் 3.3 சதவீதமாக இருக்க வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், வருவாய் குறைந்ததன் காரணமாக நிதிப் பற்றாக்குறை இலக்கு ஜிடிபி மதிப்பில் 3.8 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments