ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவுமில்லை: ரயில்வே வாரியம்
தேவைக்கேற்ற வகையில் ரயில் சேவை இயக்கப்படும் என்றும், ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
புது தில்லி: தேவைக்கேற்ற வகையில் ரயில் சேவை இயக்கப்படும் என்றும், ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், திடிரென ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவோ, ரயில்கள் பயணத்தின் பாதியில் நிறுத்தப்படுவதாகவோ அறிவிக்கப்படாது என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.
ரயில்வே வாரிய தலைமை செயல் அதிகாரி சுனீத் ஷர்மா இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நாட்டில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப, ரயில் சேவை இயக்கப்படும். ரயில் சேவையில் எந்தப் பற்றாக்குறையும் இல்லை, ரயில் சேவையை நிறுத்தும் திட்டமும் இல்லை. 2021ஆம் ஆண்டு ஏப்ரல் - மே மாதங்களில் அதிகப்படியான கூட்டத்தைக் குறைக்க அதிகமான ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகள் கூட்ட நெரிசல் இருக்கும் கோராக்பூர், பாட்னா, வாராணசி, குவகாத்தி, ராஞ்சி, லக்னெள் உள்ளிட்ட பகுதிகளுக்கு மத்திய ரயில்வேயில் 58 ரயில்களும், மேற்கிந்திய ரயில்வேயில் 60 ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
தற்போது 1,400 விரைவு ரயில்களும், 5,300 புறநகர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. 800 பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனை மாநிலங்களின் முடிவுகளுக்கு ஏற்ப அதிகரிப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில், கரோனா தொற்று அதிகரித்து வந்தாலும், அங்கு ரயில் சேவையைக் குறைப்பது குறித்தோ, ரத்து செய்வது குறித்தோ மாநில அரசிடமிருந்து எந்த பரிந்துரையும் வரவில்லை.
ரயில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, அனைவரிடமும் கரோனா இல்லை என்ற சான்றிதழைக் கோருவது இயலாத காரியம். வழக்கமாகவே, இந்த மாதங்களில் ரயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாகக் காணப்படுவது வழக்கம். தேவைக்கு ஏற்ப ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எங்குமே ரயில்களுக்கு பற்றாக்குறை இருக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.