உ.பி.க்கு திரும்பும் தொழிலாளர்கள்: தயாராகும் தனிமைப்படுத்தும் முகாம்கள்
பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வேலை தேடிச் சென்ற மாநிலங்களிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனிமைப்படுத்த, முகாம்களை தயார் செய்யும் பணியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.
லக்னௌ: பொதுமுடக்கம் அறிவிக்கப்படுமோ என்ற அச்சத்தில் வேலை தேடிச் சென்ற மாநிலங்களிலிருந்து திரும்பும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தனிமைப்படுத்த, முகாம்களை தயார் செய்யும் பணியில் யோகி ஆதித்யநாத் அரசு இறங்கியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் காரணமாக மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதனால், தங்களது வாழ்விடங்களைத் தேடி உத்தரப்பிரதேச தொழிலாளர்கள் மீண்டும் ரயிலேறி வருகிறார்கள்.
மகாராஷ்டிரம், குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட இதர மாநிலங்களிலிருந்து கடும் நெரிசலோடு வரும் ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உத்தரப்பிரதேசத்துக்குள் வந்து குவிகிறார்கள்.
ஏற்கனவே, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எந்த கட்டுப்பாடுகளும் இன்றி வெளி மாநிலத்திலிருந்து திரும்பிவிட்ட நிலையில், தற்போது தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, தனிமைப்படுத்தும் முகாம்களை அமைக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரயிலில் வந்திறங்கும் தொழிலாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்து, தொற்று உறுதி செய்பவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வசதியாக 2020ஆம் ஆண்டு மே மாதம் அமைக்கப்பட்டதைப் போன்ற முகாம்களை உருவாக்க 75 மாவட்ட நிர்வாகங்களுக்கும் முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தனிமைப்படுத்தும் முகாம்களில் தேவையான உணவுகளை சமைக்கும் சமையற்கூடங்களையும் ஏற்படுத்த யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.