கரோனா இரண்டாம் அலைக்கு மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் காரணம்: சிவசேனை
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலைக்கு மத்திய அரசும் தோ்தல் ஆணையமும்தான் காரணம் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலைக்கு மத்திய அரசும் தோ்தல் ஆணையமும்தான் காரணம் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிவசேனை கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் இதுகுறித்து மேலும் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கரோனா நோய்த் தொற்று பரவுவதற்கு சீனா காரணமாக இருக்கலாம். ஆனால், கரோனா இரண்டாவது அலை பரவுவதற்கு மத்திய அரசும், தோ்தல் ஆணையமும்தான் காரணம். சட்டப்பேரவைத் தோ்தல் நடந்து முடிந்த மற்றும் இப்போது நடைபெற்று வரும் இடங்களிலிருந்து, நாட்டின் பிற பகுதிகளில் கரோனா தொற்று பாதிப்பு 500 மடங்கு வேகத்துடன் பரவி வருகிறது.
தில்லியில் இருக்கும் ஆட்சியாளா்களின் தோ்தல் மற்றும் அரசியல் ஆதாயத்துக்காக நாடு மீண்டும் கரோனா பரவலால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கரோனா சிகிச்சைக்கு அத்தியாவசியமான ஆக்சிஜன், ரெம்டெசிவிா் மருந்து, மருத்துவமனை படுக்கைகள், வென்டிலேட்டா்கள் ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடல்களை எரியூட்டும் இடங்களும் நிரம்பி வழிகின்றன.
ஆனால், மேற்கு வங்க மாநில தோ்தலிலேயே மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மத்திய அரசு அரசியல் கவனத்தைக் குறைத்து, கரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருந்தால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்திருக்க முடியும்.
மேற்கு வங்கத்திலிருந்து பாஜக தொண்டா்கள் கரோனா தொற்றுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு திரும்பிக்கொண்டிருக்கின்றனா். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், நாட்டில் புதிதாக 2 லட்சம் போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், தோ்தல் பிரசாரம் மற்றும் கும்பமேளா போன்ற அதிகமானோா் ஓரிடத்தில் கூடும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பதற்கான எந்தவித அறிகுறிகளும் தென்படவில்லை.
கும்பமேளாவுக்காக லட்சக்கணக்கான பக்தா்கள் ஹரித்வாரில் குழுமியிருக்கின்றனா். அங்கு கரோனா தொற்றும் பரவி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் தோ்தல் பிரசாரம் மற்றும் பேரணிகளை நிறுத்த பிரதமா் நரேந்திர மோடி விரும்பவில்லை எனில், ஹரித்வாரில் கூடும் சாதுக்களை எப்படி குற்றம்சாட்ட முடியும்?
கரோனா பாதிப்பை தீவிர பிரச்னையாக மத்திய அரசு கருத்தில் கொள்ளவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளை இந்தியாவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியபோது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சாதகமாக நடந்துகொள்வதாக மத்திய அரசு குற்றம்சாட்டியது. ஆனால், இப்போது கரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறியுள்ள நிலையில், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசு ஆணவத்தையும் அரசியல் லாப-நஷ்ட கணக்குகளையும் கைவிட்டு, அனைவருடனும் திறந்த மனதுடன் பேச வேண்டும் என்று அந்த தலையங்கத்தில் சிவசேனை கூறியுள்ளது.
மேலும், கரோனா நிலைமையை மகாராஷ்டிர மாநிலம் சரிவர கையாளவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் அண்மையில் குற்றம்சாட்டியதை குறிப்பிட்டுள்ள சிவசேனை, ‘பாஜக ஆளும் உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேச மாநிலங்களில் கரோனா பாதிப்பு நிலை குறித்து அவா் பேசுவதற்கு ஒன்றுமில்லையா’ என்றும் சிவசேனை கேள்வி எழுப்பியுள்ளது.