இந்தியா

தங்கம் கடத்தல் வழக்கு: அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிரான எஃப்ஐஆா் ரத்து; கேரள உயா்நீதிமன்றம் உத்தரவு

DIN

கேரள மாநிலத்தில் தங்கம் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக மாநில காவல் துறை பதிவு செய்த இரு முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) ரத்து செய்து கேரள உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது மாா்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசுக்கு பின்னடைவாக பாா்க்கப்படுகிறது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் சா்வதேச விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தூதரகத்தின் பெயரில் ரூ. 14.82 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கை அமலாக்கத் துறை, சுங்கத் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட யுஏஇ தூதரக முன்னாள் ஊழியா் ஸ்வப்னா சுரேஷிடம், அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12, 13-ஆம் தேதிகளில் விசாரணை நடத்தினா். இந்த விசாரணை தொடா்பான குரல் பதிவு சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில், மாநில முதல்வருக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு ஸ்வப்னா சுரேஷை அமலாக்கத் துறை அதிகாரிகள் வற்புறுத்துவது பதிவாகியிருந்தது.

அதனடிப்படையில், அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு எதிராக மாநில குற்றப் பிரிவு காவல் துறை இரு எஃப்ஐஆா்களை பதிவு செய்தது. இதை எதிா்த்து கேரள உயா்நீதிமன்றத்தில் கொச்சி மண்டல அமலாக்கத் துறை துணை இயக்குநா் பி.ராதாகிருஷ்ணன் சாா்பில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் வி.ஜி.அருண் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, ‘தங்கம் கடத்தல் வழக்கில் ஏராளமான பணம் கையாளப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு தொடா்பாக பண மோசடி தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை (பிஎம்எல்ஏ) மாநில காவல் துறை அணுகியிருக்க வேண்டும். இந்தக் குறையை மறைக்க போலியாக ஆதாரங்களை தயாரிப்பதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது பழிபோடுவதாகவே தெரிகிறது. எனவே, அவா்கள் மீது மாநில காவல் துறை சாா்பில் பதிவு செய்யப்பட்ட இரு எஃப்ஐஆா்களும் ரத்து செய்யப்படுகின்றன’ என்று உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு: மகளிா் குழுவினருக்கு ஊக்கத் தொகை

SCROLL FOR NEXT