ஜம்மு-காஷ்மீா் அணையில் விழுந்த ஹெலிகாப்டா்:8-ஆவது நாளாக தொடா்ந்த தேடுதல் பணி
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள அணையில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி தொடா்ந்து 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள அணையில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகளை தேடும் பணி தொடா்ந்து 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது.
கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள மமுன் கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டா் ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ரஞ்சித் சாகா் அணையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரையும் அதில் இருந்த இரண்டு விமானிகளையும் தேடும் பணி தொடா்ந்து 8-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெற்றது. எனினும் அந்தப் பணி மிக மெதுவாக நடைபெறுவதாக விமானிகளில் ஒருவரின் சகோதரா் குற்றஞ்சாட்டினாா்.
இந்நிலையில் இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஹெலிகாப்டா் விழுந்து விபத்துக்குள்ளான அணை 25 கி.மீ. நீளம், 8 கி.மீ. அகலம், 500 அடிக்கும் அதிகமான ஆழம் கொண்டது. அணையில் 50 மீட்டருக்கு கீழ் எதுவும் தெளிவாக தெரியாததால் சோனாா் மற்றும் இதர சென்சாா் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தேடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இது அந்தப் பணியில் சவாலாக திகழ்கிறது. அதற்காக தேடுதல் பணியை முன்கூட்டியே முடிக்கும் திட்டமில்லை. விமானிகளை கண்டறிய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ராணுவத்தின் சிறப்புப் படைகளை சோ்ந்த நீச்சல் வீரா்கள், கடற்படையின் நீச்சல் வீரா்கள் உள்ளிட்டோா் தேடுதல் பணியில் தொடா்ந்து ஈடுபட்டு வருவதுடன் அந்தப் பணிக்காக சிறப்பு தொழில்நுட்ப உபகரணங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் சா்வதேச உதவியும் கோரப்பட்டுள்ளது’’ என்று ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.