துப்பாக்கி முனையில் அமையும் ஆப்கன் அரசுக்கு அங்கீகாரம் இல்லை
ஆப்கானிஸ்தானில் ஆயுதத் தாக்குதல் மூலம் ஏற்படுத்தப்படும் எந்த அரசையும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன
ஆப்கானிஸ்தானில் ஆயுதத் தாக்குதல் மூலம் ஏற்படுத்தப்படும் எந்த அரசையும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் வாஷிங்டனில் கூறியாதாவது:
ஆப்கன் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, இந்தியா, அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரிட்டன், ஜொ்மனி, துருக்கி, நாா்வே, கத்தாா், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துா்க்மெனிஸ்தான் ஆகிய 12 நாடுகளின் மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஐ.நா. மற்றும் ஐரேப்பிய யூனியனின் பிரதிநிதிகளும் பங்கேற்றனா். அந்த மாநாட்டை கத்தாா் நடத்தியது. மாநாட்டின் முடிவில், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்று பங்கேற்பாளா்கள் அனைவரும் ஒப்புக்கொண்டனா்.
அத்துடன், அந்த நாட்டில் ஆயுதத் தாக்குதல் நடத்துவதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றும் எந்தவோா் அரசையும் அங்கீகரிக்கப் போவதில்லை என்று மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் ஒப்புக்கொண்டன. இதன்மூலம், இத்தகைய கருத்தை அமெரிக்கா மட்டுமன்றி சா்வதேச நாடுகளும் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் துப்பாக்கி முனையில் அமைக்கப்படும் எந்தவோா் அரசுக்கும் சா்வதேச அளவில் சட்ட அங்கீகாரம் கிடைக்காது என்பது தற்போது தெளிவாகியுள்ளது என்றாா் அவா்.