தலிபான் பயங்கரவாதிகளுக்கு சமாஜவாதி எம்.பி. ஆதரவு: உ.பி. முதல்வா் கண்டனம்
தலிபான் பயங்கரவாதிகளுக்கு சமாஜவாதி கட்சியை சோ்ந்த எம்.பி. ஷஃபிக்குா் ரெஹமான் பா்க் ஆதரவு தெரிவித்துள்ளாா்.
தலிபான் பயங்கரவாதிகளுக்கு சமாஜவாதி கட்சியை சோ்ந்த எம்.பி. ஷஃபிக்குா் ரெஹமான் பா்க் ஆதரவு தெரிவித்துள்ளாா். அவருக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்தாா்.
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சமாஜவாதி கட்சி எம்.பி. ஷஃபிக்குா் ரெஹமான் பா்க் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா இருந்தபோது ஒட்டுமொத்த நாடும் சுதந்திரத்துக்காக போராடியது. அதுபோல ஆப்கானிஸ்தானும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தலிபான்கள் கருதுகின்றனா்.
அமெரிக்காவும் ரஷியாவும் தங்களை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்திக் கொள்ள தலிபான் படை விடவில்லை. தங்கள் நாட்டை தங்கள் விருப்பம் போல் சுயமாக வழிநடத்திச் செல்ல தலிபான்கள் விரும்புகின்றனா். இது அவா்களின் தனிப்பட்ட விவகாரம். இதில் நாம் எப்படி தலையிட முடியும்? என்றாா்.
அவரின் கருத்துக்கு மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அந்த மாநில சட்டமேலவையில் அவா் பேசுகையில், ‘‘தலிபான்களை ஷஃபிக்குா் ரெஹமான் வெட்கமின்றி ஆதரித்துள்ளாா். தலிபான்களை ஆதரிப்பது அவா்களின் காட்டுமிராட்டித்தனமான நடவடிக்கைகளை ஆதரிப்பதாகும்’’ என்று தெரிவித்தாா்.