முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சொல்லப் போனால்... கட்சிகளின் வாக்கு சதவிகிதம் என்கிற கற்பிதம்!

கூட்டணியாகப் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தனிச் செல்வாக்கை அவை பெற்ற வாக்குகளின் அடிப்படையில் கணக்கிடுவது பற்றி...

Updated On : 22 மார்ச், 2026 at 2:45 AM
2021 தேர்தல் செல்வாக்கு... - சித்திரிப்பு / விஜய்
பகிர்:

எண்கள் எல்லாமும் எப்போதும் தாரே ஸமீன் பர் ஹிந்தித் திரைப்படத்தில் ஆமிர் கானுடைய மாணவனாக வருகிற இஷானுக்கு மட்டுமல்ல; நம்மில் பலருக்குமே கொஞ்சம் தொந்தரவு தருபவைதான். நிறைய பேர் எண்களாகச் சொல்லிப் பேசுவார்கள், எழுதுவார்கள், சில நேரங்களில் ரொம்பவே குழம்பிப் போய்விடும்.

இதோ தேர்தல் வந்துவிட்டது. மீண்டும் எண்கள் படையெடுக்கத் தொடங்கிவிட்டன. இத்தனை தொகுதிகள், இத்தனை வாக்குகள், இவ்வளவு ஆண்கள், இவ்வளவு பெண்கள், இந்தக் கட்சிக்கு இவ்வளவு, அந்தக் கட்சிக்கு அவ்வளவு, மொத்த வாக்குகள் இத்தனை சதவிகிதம், பதிவான வாக்குகள் இவ்வளவு, இந்தச் சாதிக்கு இவ்வளவு வாக்குகள், அந்தச் சாதிக்கு அவ்வளவு வாக்குகள்... அப்பப்பா... திரும்பிய பக்கங்களில் எல்லாம் வெறும் எண்கள், எண்கள், எண்கள்!

தேர்தல் நெருங்க நெருங்க, கூட்டணிகளில் தொகுதிப் பங்கீடுகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் தமிழ்நாட்டில் பதிவான வாக்குகளுடன்,  அரசியல் கட்சிகள் வென்ற தொகுதிகளின் எண்ணிக்கையும் அவை பெற்ற வாக்குகளின் சதவிகிதங்களும் (வோட் ஷேர் - Vote Share) அலசப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 37.7 சதவிகித வாக்குகளைப் பெற்ற திமுக, 133 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 33.3 சதவிகித வாக்குகளைப் பெற்ற அதிமுக, 66 தொகுதிகளைக் கைப்பற்றியது. 4.3 வாக்கு சதவிகிதம் பெற்ற காங்கிரஸ், 18 இடங்களைப் பெற்றது. 2.6 சதவிகித வாக்குகள் பெற்ற பாரதிய ஜனதா கட்சி 4 தொகுதிகளில் வென்றது. பதிவான மொத்த வாக்குகளில் இந்தக் கட்சிகள் பெற்ற சதவிகிதத்துக்கும் வென்ற தொகுதிகளுக்கும் எவ்விதப் பொருத்தப்பாடும் இருக்காது; இருப்பதில்லை.

குறிப்பிட்ட ஒரு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியோ, காங்கிரஸ் கட்சியோ வெற்றி பெற்றால் அந்தக் கட்சி பெற்ற வாக்குகள் அனைத்தும் அவற்றின் செல்வாக்காக – வாக்கு சதவிகித கணக்கிற்கு மொத்தமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன. உள்ளபடியே, குறிப்பிட்ட தொகுதியில் பாரதிய ஜனதாவுக்கோ காங்கிரஸுக்கோ அவ்வளவு வாக்குகள் இருப்பதில்லை; இருக்கவும் இருக்காது. இந்தக் கட்சிகள் கூட்டணி வைத்துள்ள அனைத்துக் கட்சிகளின் ஆதரவு வாக்குகளும் சேர்ந்து ஒட்டுமொத்தமாகத்தான் இவற்றுக்குக் கிடைக்கின்றன; இவற்றின் கணக்கில் சேர்க்கப்படுகின்றன.

ஆக, கூட்டணிகளில் இணைந்து போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் பெறுகிற வாக்குகள் யாவும் அவற்றின் தனிப்பட்ட செல்வாக்கு அல்ல; அவற்றின் வாக்கு பலமும் அல்ல.

சில ஆயிரம் வாக்காளர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள ஒரு சுயேச்சை, ஏதேனும் ஒரு கூட்டணியின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டு வெல்லும்போது சில லட்சங்களில் வாக்குகளைப் பெறுகிறார். இவை என்னவோ, குறிப்பிட்ட தொகுதியில் அவருக்கு ஆதரவாக விழுந்த அனைத்துக் கட்சிகளின் வாக்குகளே தவிர அவருடைய வாக்குகள் அல்ல.

தமிழ்நாட்டில் குறிப்பிட்ட தொகுதிகளில், தலா 130 என்று வைத்துக் கொள்ளலாம்,  திமுக, அதிமுக போட்டியிடுகின்றன. இந்த 130 தொகுதிகளில் பெற்ற வாக்குகள் மட்டுமே இவற்றின் பலத்துக்கான வாக்கு சதவிகிதத்திற்காகக் கணக்கிடப்படும். ஆனால், இந்தக் கட்சிகளுக்குத் தமிழ்நாடு முழுவதும் மீதியுள்ள 104 தொகுதிகளிலும் வாக்குகள் இருக்கின்றன. ஆனால்,  இந்த (திமுக, அதிமுக ஆதரவு) வாக்குகள் யாவும் இவற்றுடன் இணைந்து போட்டியிடும் கூட்டணிக் கட்சிகளில் ஏதோ வேறு ஒன்றுக்கே கிடைக்கின்றன; அவற்றின் செல்வாக்கு சதவிகிதக் கணக்கில் சேர்ந்துவிடுகின்றன.

ஆக, கூட்டணி சேர்ந்து போட்டியிடும் எந்தவொரு கட்சியும் தாங்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற அல்லது தோல்வியுற்ற குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தொகுதிகளில் மட்டும் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக  மாநிலத்துக்கான, தங்களுடைய செல்வாக்கு சதவிகிதம் எனக் கணக்கிட இயலாது.

அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் (வெற்றியோ, தோல்வியோ) தனித்தனியே போட்டியிட்டால் அவற்றின் செல்வாக்கு விவரம் – சதவிகிதம் தெரிந்துவிடும். இவை தனித்தனியாகப் போட்டியிடாதவரை இந்தக் கட்சிகளின் செல்-வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிடவே முடியாது; கணக்கிடவும் கூடாது.

ஒரு கட்சி கூட்டணியெதிலும் இணையாமல் தனித்தே போட்டியிட்டாலும்கூட, 234 தொகுதிகளிலும் போட்டியிடாதபட்சத்தில் மாநிலம் முழுவதுமான அதன் செல்-வாக்கு சதவிகிதத்தைக் கணக்கிட முடியாது.

இப்போது சொல்லப்படுகிற, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்பட பெரும்பாலான கட்சிகளின் செல்வாக்கு சதவிகிதம் எல்லாமும் கூட்டாகக் கணக்கிடப்படுபவையே.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்களைப் பொருத்தவரை 1962 வரையிலும் கூட்டணியாக இணைந்து போட்டியிடுவது அறிமுகமாகவில்லை. காங்கிரஸ்தான் பெரிய கட்சி. மற்றவர்கள் எல்லாம் தனித்தனியே போட்டியிடுவார்கள். சிறு சிறு வெளி ஆதரவுகள் இருக்கலாம்.

1967 தேர்தலில் கூட்டணி டெம்ப்ளேட் அறிமுகமாகிறது. காங்கிரஸுக்கு எதிராக திமுக, சுதந்திரா, மார்க்சிய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணியாக – ஐக்கிய முன்னணியாகப் போட்டியிட்டுப் பெரும் வெற்றி பெற்றன. ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 232 தொகுதிகளில் போட்டியிட்டு, ஆட்சியை இழந்தது (தனித்து காங்கிரஸ் வாங்கிய வாக்குகள் அதன் செல்வாக்கைப் பிரதிபலிக்கிறது – 41.10%).

பிறகு வந்த ஒவ்வொரு தேர்தலிலும் பெரும்பாலும் கூட்டணிகள்தான். அனேகமாக, திமுக அல்லது அதிமுகவுடன் இணைந்தவையாக இருக்கும்.

1977 தேர்தலில் புதிதாகத் தொடங்கப்பட்டிருந்த அதிமுக கூட்டணியாகவும் இந்திரா காங்கிரஸ் கூட்டணியாகவும் தனித்தனியே போட்டியிட்டன. திமுகவும் (230 தொகுதிகளில்) ஜனதா கட்சியும் (233 தொகுதிகளில்) தனித்தனியே போட்டியிட்டுத் தலா 24.9, 16.7 சதவிகித வாக்குகளைப் பெற்றன.

1989-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி எனத் தனித்துப் போட்டியிட்டாலும் ஜெயலலிதா அணியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (செல்வாக்கு 22.2%) ஜானகி அணியுடன் சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியும் (செல்வாக்கு 9.2%) இணைந்து நின்றன.

இந்தத் தேர்தலில் மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சியும் கிட்டத்தட்ட தனித்து (214 தொகுதிகளில்), ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி (10), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (5) ஆகியவற்றுடன் சேர்ந்து போட்டியிட்டு 19.83 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

1991-ல் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு, 5.89 சதவிகித வாக்குகள் பெற்றது.

2006-ல் நடிகர் விஜய்காந்த் புதிதாக தொடங்கிய தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு, 8.38 சதவிகித வாக்குகளைப் பெற்றது. எனினும், விஜயகாந்த் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனால், தொடங்கியதுமே தனித்துப் போட்டியிட்டாலும், சுமார் 100 தொகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று பல வேட்பாளர்களின் வெற்றி – தோல்விகளை மாற்றியமைத்தது தேமுதிக.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுசிறு கட்சிகளை இணைத்துக்கொண்டு அதிமுக மட்டும் தனித்தே 225 தொகுதிகளில் போட்டியிட்டு, 134 தொகுதிகளில் வென்று ஆட்சியும் அமைத்தது (41.06 % வாக்குகள்).

அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளர் என முன்னிறுத்தி பா.ம.க. தனித்துப் போட்டியிட்டது; வெறும் 5.32% வாக்குகளைப் பெற்றது.

இதே 2016 தேர்தலில் நடிகர் - இயக்குநர் சீமான் தொடங்கிய நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு 1.06% வாக்குகளைப் பெற்றது (விஜயகாந்த் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட்டது இந்தத் தேர்தலில்தான்).  தொடர்ந்து விடாப்பிடியாக, 2021 தேர்தலிலும் 234 தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிட்டு 6.58 சதவிகித வாக்குகளைப் பெற்றது.

2021-ல் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கிட்டத்தட்ட தனித்துப் போட்டியிட்டது. தேர்தலில் 2.52 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கோவை தெற்கில் சுமார் 1,700 வாக்குகளில் கமல்ஹாசன் தோற்றார்.

1967-ல்தான் கூட்டணி ஃபார்முலா தொடங்குகிறது. இந்தக் கணக்குகள் - எண்கள் – சதவிகிதங்கள் யாவும் சட்டப்பேரவைத் தேர்தல்களை முன்வைத்துதான். மக்களவைத் தேர்தலில் தனித்து, கூட்டணி என அவ்வப்போது சில மாற்றங்கள், போட்டிகள் இருந்தாலும் அடிப்படையில் கட்சிகளின் செல்வாக்கைப் பெற்ற வாக்கு சதவிகிதம் என்று அளப்பதில் எந்தவித பொருளும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இதேபோலதான், தேர்தல் காலத்து சாதிக் கணக்குகளும். எந்தக் காலத்தில் எந்த சாதி மக்கள், எந்த அரசியல் கட்சிக்கு என முற்றாக வாக்களித்திருக்கிறார்கள்? வாக்களித்திருப்பார்கள், வாக்களிப்பார்கள் என்று கணிக்க மட்டும் செய்கிறார்களே தவிர, உண்மையில் சாதி அடிப்படையில் வாக்குகள் பதிவாகிறதுதானா? என்பதுகூட யாருக்கும் உறுதியாகத் தெரியாது. அத்தனையும் அனுமானத்தில் கட்டியெழுப்பப்படுபவையே.

1967-ல் தனித்துப் போட்டியிட்டு 41 சதவிகித வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 1989-ல் தனித்துப் போட்டியிட்டபோது, வெறும் 19 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. இன்றைக்கு காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடியுமா? உண்மையிலேயே தன்னுடைய பலத்தை அறிந்துகொள்ள முடியுமா? என்றெல்லாம் நினைத்தும் பார்க்க முடியாது.

திமுக, அதிமுக உள்பட இது எல்லா கட்சிகளுக்குமே பொருந்தக் கூடியதுதான். இனி வருங்காலத்தில், வேறு வழியில்லாமல் தள்ளப்படாத வரையில், இந்த மாதிரி ‘ரிஸ்க்’கையெல்லாம் எந்த அரசியல் கட்சியும் எடுக்கவும் செய்யாது.

கூட்டணியே வேண்டாம் என்று கடந்த இரு தேர்தலிலும் தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, இதுவரை வெற்றி பெறாவிட்டாலும் வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடப் போவதாக வேட்பாளர்களையும் அறிவித்திருக்கிறது. இந்த முறை மேலும் கூடுதல் வாக்குகளைப் பெற முடியும் என்று நம்புகிறது. இலக்கு என்னவெனத் தெரியவில்லை.

தனித்துப் போட்டியிடும்போது மிக அபூர்வமாகத்தான் வெற்றி பெறுகிறார்கள். 2014 மக்களவைத் தேர்தலிலும் 2016 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக பெற்ற வெற்றிகள் இப்படிப்பட்டவையே. இவ்விரு வெற்றிகளையும் முன்னெடுத்தவர் ஜெயலலிதா!

கூட்டணி பற்றி நிறையவே பேசப்பட்டபோதிலும், 2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறது நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம். தவெகவைப் பொருத்தவரை தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது அதன்  உண்மையான செல்வாக்கு சதவிகிதம் தெரிய வந்துவிடும்.

அனைத்துக் கட்சிகளுமே ஒருவேளை தனித்தனியே அனைத்துத் தொகுதிகளிலும் அல்லது தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளில் போட்டியிட்டால் – இதெல்லாம் பெரிய கட்சிகள் எனச் சொல்லிக் கொண்டிருக்கிற சில கட்சிகளுக்கேகூட சாத்தியமேயில்லை – ஒவ்வொரு கட்சியின் செல்வாக்கை, வாக்கு சதவிகிதத்தை, பலத்தை அறிந்துகொள்ள முடியும்.

அபூர்வத்திலும் அபூர்வமான அரசியல் சூழ்நிலைகளைத் தவிர, மற்றபடி  தனித்தனியே கட்சிகள் போட்டியிடுவது என்பது வாக்குகளைப் பிரிப்பதிலும் பிரதானமான கட்சிகளுடைய வேட்பாளர்களின் வெற்றி – தோல்விகளில் நிச்சயமற்ற நிலைமையை ஏற்படுத்துவதிலும்தான் முடியும்!

அல்லாமல் கைவசமுள்ள - கிட்டத்தட்ட - ஏறத்தாழ - சற்றேறக் குறைய – சுமாரான - உத்தேச வாக்குப் பதிவுத் தரவுகளையும் வெற்று நம்பர்களையும் சதவிகிதங்களையும் வைத்துக்கொண்டு அரசியல் கட்சிகளின் பலத்தை அளவிடுவதும் அவற்றின் அடிப்படையிலான அரசியலும் காற்றிலேறி விண்ணைச் சாட முயலுவதைப் போலதான், ‘தாரே ஸமீன் பர்’ இஷான் மாதிரியே விழித்துக்கொண்டு!

summary

Regarding calculating the individual strength of political parties competing in coalitions based on the votes they received...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.