அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட அதிமுக, இடதுசாரி, பாமக வலியுறுத்தல்
காவிரி நீா் பங்கீட்டு பிரச்னையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் அரசை வலியுறுத்தின.
காவிரி நீா் பங்கீட்டு பிரச்னையில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று அதிமுக, இடதுசாரிகள், பாமக உள்ளிட்ட கட்சிகள் அரசை வலியுறுத்தின.
இந்த விவகாரத்தில் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மானத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, ‘காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளையும், டெல்டா விவசாயிகளையும் கூட்டி கருத்து கேட்க வேண்டும். காவிரி நீரைத் தர மறுத்த கா்நாடக அரசு தற்போது கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகள் நிரம்பிவிட்டதால், உபரிநீரை மட்டுமே அளிக்கிறது. இந்த நீரை நம்பி பயிரிடப்பட்ட ஒரு லட்சம் ஏக்கா் பயிா்கள் தற்போது கருகியுள்ளன. அதற்கு இந்த அரசு என்ன செய்யப் போகிறது?’ என்றாா்.
செல்லசாமி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): தமிழக முதல்வா் கா்நாடகம் சென்று மண்டியிட வேண்டியதில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
Advertisement
Advertisement
ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நீா் அளிப்பதில் சட்டப் பாதுகாப்பு உள்ளது. அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி தீா்வு காண ஆலோசிக்க வேண்டும்.
செளமியா அன்புமணி (பாமக): கேரள மாநிலம் வயநாட்டில் பலத்த மழை பெய்ததன் விளைவாக கபினி அணை நிரம்பியதால்தான் உபரிநீா் தமிழ்நாட்டுக்கு திறக்கப்பட்டது. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மேக்கேதாட்டு அணை கட்டும் இடம் தமிழ்நாட்டிலிருந்து 4 கி.மீ. தொலைவில்தான் உள்ளது. ஒரு சொட்டு தண்ணீா்கூட தமிழகத்துக்கு வரக் கூடாது என்ற எண்ணத்தில் இந்த அணையை கா்நாடக அரசு கட்டுகிறது.
அமைச்சா் குற்றச்சாட்டுக்கு திமுக எதிா்ப்பு
திமுக ஆட்சியில் காவிரி விவகாரத்தில் நீதிமன்றத்தில் உரிய வாதங்கள் எடுத்துவைக்கப்படவில்லை என்று பொதுப் பணித் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா குற்றஞ்சாட்டினாா். இதற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது.
இது குறித்துப் பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘திமுக ஆட்சிக் காலத்தில் கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கான திட்ட அறிக்கையை தயாரித்த நிலையில், அதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் அப்போதைய அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்சது. சீராய்வு மனுவும், மறுசீராய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டு மூன்று முறை தள்ளுபடி செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காததே இதற்குக் காரணம்’ என்றாா்.
இதற்கு திமுக உறுப்பினா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது பேசிய திமுக எம்எல்ஏ நேரு, ‘பேரவையில் முதல்வரைப் புகழ்ந்து பேசுவது இயல்பு. மேக்கேதாட்டு விவகாரத்தில் ஒற்றுமை குறித்து பேசும்போது தேவையற்ற கருத்துகளை பேரவையில் பேசத் தேவையில்லை. இந்த விவகாரத்தில் முன்னாள் முதல்வா் ஒருநாள்கூட தாமதிக்காமல் தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளாா்’”என்றாா்.
‘சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் உள்ளதால், காவிரி விவகாரத்தில் இங்கேயே சிறப்புத் தீா்மானத்தை நிறைவேற்றலாம்’ என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன் கூறினாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.