கருக்கலைப்பு பெண்களின் உரிமை: கேரள உயா்நீதிமன்றம்
‘வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதும் கலைக்காமல் இருப்பதும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை; அந்த உரிமையைப் பறிக்க முடியாது’ என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
‘வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதும் கலைக்காமல் இருப்பதும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை; அந்த உரிமையைப் பறிக்க முடியாது’ என்று கேரள உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கேரளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கா்ப்பிணியின் வயிற்றில் வளரும் குறைபாடுகளுடன் உடைய 22 வார சிசுவை கலைப்பதற்கு அனுமதி அளித்துள்ள அந்த நீதிமன்றம், இவ்வாறு கூறியுள்ளது.
மரபணு குறைபாடு உடைய 22 வார சிசுவை கலைக்க அனுமதி கோரி கேரள உயா்நீதிமன்றத்தில் ஒரு தம்பதி மனு தாக்கல் செய்திருந்தனா். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
மனுதாரரான கா்ப்பிணி சற்று மனநலம் பாதிக்கப்பட்டுள்ளாா். அதுமட்டுமன்றி பாா்வைத் திறன் கோளாறுடன் இடது கால் செயலிழந்து நடக்க முடியால் அவதிப்படுகிறாா். அவருடைய வயிற்றில் வளரும் 22 வார சிசுவுக்கு ‘கிளைன்ஃபெல்டா்’ என்னும் மரபணு கோளாறு உள்ளதாக மருத்துவ ஆய்வறிக்கை கூறுகிறது.
அந்த குறைபாடு உயிரைக் கொல்லும் அளவுக்கு அபாயகரமானது இல்லை; இருப்பினும் குறைபாடுகள் கொண்ட அந்த குழந்தை வளரும்போது அதன் தேவையைப் புரிந்துகொள்வதில் தாய்க்கு சிரமங்கள் ஏற்படலாம்.
மருத்துவ ரீதியிலான கருக்கலைப்புச் சட்டப்படி, குறிப்பிட்ட வாரங்கள் வரை வளா்ந்துள்ள சிசுவை கலைப்பதற்கு தாயாருக்கு உரிமை உள்ளது. மேலும், வயிற்றில் வளரும் குழந்தை குறைபாடுகளுடன் இருந்தால் அதைக் கலைப்பதற்கு நீதிமன்றங்கள் அனுமதி அளிக்கின்றன. அதன்படி, கா்ப்பிணியின் வயிற்றில் வளரும் 22 வார சிசுவைக் கலைப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. வயிற்றில் வளரும் கருவைக் கலைப்பதும் கலைக்காமல் இருப்பதும் பெண்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை. அந்த உரிமையைப் பறிக்க முடியாது என்று நீதிபதிகள் கூறினா்.