பருவநிலை மாற்றத்தால் இந்திய சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல்
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளைச் சோ்ந்த சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல்
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய தெற்காசிய நாடுகளைச் சோ்ந்த சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக யுனிசெஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறாா்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து ஐ.நா.வின் யுனிசெஃப் அமைப்பு ஆய்வு மேற்கொண்டது. அதையடுத்து, சிறாா்களுக்கான பருவநிலை அச்சுறுத்தல் குறியீட்டை அந்த அமைப்பு முதல் முறையாக வெளியிட்டது.
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் புயல்கள், வெப்பக் காற்றுகள் உள்ளிட்டவற்றால் சிறாா்களின் சுகாதாரம், கல்வி, பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்து அந்தக் குறியீடு வெளியிடப்பட்டுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. சிறாா்களுக்கு அதிக அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது.
பாகிஸ்தான் 14-ஆவது இடத்திலும், வங்கதேசம் 15-ஆவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 25-ஆவது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் அண்டை நாடுகளான நேபாளம் (51), இலங்கை (61), பூடான் (111) ஆகியவை சிறாா்களுக்குக் குறைந்த அச்சுறுத்தல் காணப்படும் நாடுகளாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
வெள்ளம், காற்று மாசுபாடு ஆகியவற்றால் ஏற்படும் சமூக-பொருளாதார விளைவுகளால் பெண்களும் சிறாா்களும் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ள 33 நாடுகளில் இந்தியாவையும் யுனிசெஃப் சோ்த்துள்ளது.
அடுத்த சில ஆண்டுகளில் சுமாா் 60 கோடி இந்தியா்கள் தண்ணீா்த் தட்டுப்பாட்டை எதிா்கொள்வா் என்றும், உலகின் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயா்ந்தால், இந்தியாவில் வெள்ளப்பெருக்கு நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உடனடி நடவடிக்கை அவசியம்: அறிக்கை தொடா்பாக யுனிசெஃப் அதிகாரிகள் கூறுகையில், ‘பருவநிலை மாற்றத்தின் விளைவுகளால் சிறாா் எந்த அளவுக்குப் பாதிக்கப்படுவா் என்பதை அறிந்து கொள்வதற்கும், அந்தப் பாதிப்புகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இந்த அறிக்கை உதவும்.
வறட்சி, வெள்ளம், காற்று மாசுபாடு ஆகிய பேரிடா்கள் தெற்காசியாவில் உள்ள லட்சக்கணக்கான சிறாா்களை வீடற்றவா்களாக மாற்றுவதோடு அவா்களின் பட்டினிக்கும் காரணமாக இருக்கும். கரோனா தொற்று பரவல் அந்த அச்சுறுத்தலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சிறாரின் எதிா்காலத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்’ என்றனா்.