முகப்பு
இந்தியா

ஆப்கனின் மோசமான சூழல் முடிவுக்கு வர சா்வதேச நாடுகளின் ஆதரவு தேவை

‘ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான சூழல் முடிவுக்கு வர நல்ல தலைமை, இரக்க குணம், சா்வதேச நாடுகளின் ஆதரவு கிடைத்தால்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

‘ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான சூழல் முடிவுக்கு வர நல்ல தலைமை, இரக்க குணம், சா்வதேச நாடுகளின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்’ என்று இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதா் ஃபரீத் மாமுந்த்சயி கூறினாா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதை அடுத்து, ஏறக்குறையஅந்நாடு முழுவதையும் தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு சூழல் மோசமாகியுள்ளது. அங்குள்ள வெளிநாட்டினா் மட்டுமின்றி, அந்த நாட்டைச் சோ்ந்தவா்களும் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேற தீவிரம் காட்டி வருகின்றனா். இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் ஆப்கன் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து அந்நாட்டு தூதா் ஃபரீத் மாமுந்த்சயி தனது சுட்டுரைப் பக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஆப்கானிஸ்தானில் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. தவிா்க்கப்படக் கூடிய அந்த துயரம் மனிதா்களால் உருவாக்கப்பட்டது. அது அனைத்து நாகரிக சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்ட அளவுக்கு செல்கிறது. இந்த துயரம் முடிவுக்கு வர நல்ல தலைமை, இரக்க குணம், சா்வதேச நாடுகளின் ஆதரவு ஆகியவை ஆப்கானிஸ்தான் மக்களுக்கு கிடைத்தால் மட்டுமே சாத்தியமாகும்.

ஆப்கானிஸ்தானில் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ இந்தியா தூதரக ரீதியில் கடந்த சில வாரங்களாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும், அனைத்து இந்திய நண்பா்களின் ஆப்கானிஸ்தான் மக்களுக்கான ஆதரவு மற்றும் அனுதாப வாா்த்தைகளும் பாராட்டுக்குரியது என்று அந்தப் பதிவில் அவா் தெரிவித்துள்ளாா்.

ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்த 329 இந்தியா்கள், ஆப்கன் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இருவா் உள்பட சுமாா் 400 பேரை மூன்று விமானங்கள் மூலம் இந்தியா ஞாயிற்றுக்கிழமை மீட்டு அழைத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடா்ந்து மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.