உதகையில் திரைப்பட நகர் அமைக்க மத்திய அரசுக்கு ஆ.ராசா எம்.பி. கோரிக்கை
இயற்கை எழில் மிகுந்த உதகையில் திரைப்பட நகர் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இயற்கை எழில் மிகுந்த உதகையில் திரைப்பட நகர் ஒன்றை அமைக்க வேண்டும் என்று நீலகிரி மக்களவைத் தொகுதி திமுக உறுப்பினர் ஆ.ராசா, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குருக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மலைகளின் அரசியாக இருக்கும் உதகமண்டலத்தில் இயற்கை கொடுத்த கொடையினால் அழகு மிகு தொட்டபெட்டா சிகரம், டால்பின் நோஸ், கிங்ஸ் பார்க், தாவரவியல் பூங்கா, அவிலேன்ஜ், ரேஸ் கோர்ஸ், ஊட்டி ஏரி, கொடநாடு போன்ற இடங்கள் உள்ளன. மேலும், இவற்றைச் சுற்றி கோத்தகிரி, கூடலூர், கேத்தி, குன்னூர், அருவன்காடு போன்ற சுற்றுலாத் தளங்களும் உள்ளன. இங்கு ஏற்கெனவே தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. இங்கு ஏற்கெனவே படமாக்கப்பட்ட ரோஜா, மூன்றாம் பிறை (சாத்மா), ராஜா ஹிந்துஸ்தானி, குச் குச் ஹோதா ஹை போன்ற திரைப்படங்கள் புகழ் பெற்றவையாகும்.
இதுபோன்ற சூழலில் ஒரு திரைப்பட நகர் உருவாக்குவதற்கு உதகமண்டலம் உகந்த இடமாக உள்ளது. இதன்மூலம் உள்புறக் காட்சிகளும் வெளிப்புறக் காட்சிகளும் ஏராளமாக படம் எடுக்க முடியும். இதற்கான பரந்த நிலம் இந்தப் பகுதியில் உள்ளது. மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நிலத்தைத் தரவும் தயாரா உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு உதகமண்டலத்தில் திரைப்பட நகர் உருவாக மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இதுதொடர்பாக விரைவில் முடிவு எடுத்து, இதற்கான திட்ட அறிக்கையைப் பெற வேண்டும். இதன்மூலம் இந்தப் பகுதியில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்து பொருளாதாரம் மேம்படும் என அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் கேந்திரிய வித்யாலயா: இதேபோன்று மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் எழுதிய கடிதத்தில் நீலகிரி தொகுதிக்குள்பட்ட மேட்டுப்பாளைத்தில் ராணுவ வீரர்கள், ராணுவப் பயிற்சி மையம் போன்றவை இருந்தும் இங்கு பணிபுரியும் மத்திய, மாநில ஊழியர்களுக்கு மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இல்லை என்றும், எனவே இங்கு இங்கு அந்தப் பள்ளியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மத்திய அரசின் அச்சகம் (பிரஸ்) மேட்டுப்பாளையத்தில் செயல்பட்டு வந்தது. மத்திய அரசு அதை இப்போது மூடிவிட்டது. இந்த அச்சகக் கட்டடத்திலேயே உலகத் தரம் வாய்ந்த பள்ளியை தொடங்குவதற்கான நிலமும் கட்டுமானமும் உள்ளது. அதை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ராமேசுவரம் எக்ஸ்பிரஸ்:
ரயில்வே அமைச்சர் அஸ்வனி வைஷ்னவுக்கும் ஆ.ராசா செவ்வாய்க்கிழமை கடிதம் எழுதியுள்ளார். அதில், "பயணிகள் தேவையைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்திலிருந்து கோவை, பழனி, திண்டுக்கல் வழியாக ராமேசுவரத்துக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் உள்ள இரு நடைமேடைகளிலும் அகல ரயில் பாதை, மீட்டர் கேஜ் பாதை வசதிகளை அமைக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்.