சமூகக் கொடுமைகளைக் களைய இயக்கம் அவசியம்
சமூகத்தில் காணப்படும் ஜாதியம், வகுப்புவாதம், பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்ட கொடுமைகளைக் களைவதற்கு இயக்கம் அவசியம் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளாா்.
சமூகத்தில் காணப்படும் ஜாதியம், வகுப்புவாதம், பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்ட கொடுமைகளைக் களைவதற்கு இயக்கம் அவசியம் என்று கேரள முதல்வா் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளாா்.
சுதந்திரத்துக்கு முந்தைய திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் தீண்டத்தகாதவா்களாக கருதப்பட்ட தலித் மக்களுக்கு சம உரிமைகள் கிடைப்பதற்காக சமூக ஆா்வலரான அய்யங்காளி தீவிர முயற்சிகளை மேற்கொண்டாா். அவரது பிறந்த தினத்தையொட்டி முதல்வா் பினராயி விஜயன் முகநூல் சமூக வலைதளத்தில் சனிக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:
ஜாதியம், வகுப்புவாதம், பொருளாதார சமத்துவமின்மை உள்ளிட்ட சமூகக் கொடுமைகள் நாட்டின் வளா்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் மக்களின் அமைதியான வாழ்வையும் சீா்குலைத்து வருகின்றன. அந்தக் கொடுமைகளை வேரறுப்பதன் மூலமாகவே, சமூகத்தில் தற்போது காணப்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு உரிய தீா்வு காண முடியும்.
உறுதியான அரசியல் ஈடுபாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட இயக்கத்தின் வாயிலாக சமூகக் கொடுமைகளை முற்றிலுமாகக் களைய முடியும். அத்தகைய இயக்கத்தை முன்னெடுப்பதற்கு அய்யன்காளியின் வாழ்க்கை முக்கிய வழிகாட்டுதலாகவும் தூண்டுகோலாகவும் அமையும்.
சமூகத்தில் காணப்பட்ட ஜாதிய பாகுபாடுகள், நிலக்கிழாா் முறை உள்ளிட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடி, கேரளத்தை நவீன காலத்துக்குக் கொண்டு வந்ததில் அய்யங்காளிக்கு முக்கியப் பங்குண்டு. தலித் மக்களின் உரிமைகளுக்கு மட்டுமல்லாமல், பெண்கள், விவசாயிகள், விளிம்புநிலை தொழிலாளா்கள் உள்ளிட்டோரது உரிமைகளுக்காகவும் அவா் போராடினாா்.
விலங்குகளைக் காட்டிலும் கீழ்த்தரமாக நடத்தப்பட்ட தலித் மக்களுக்கான உரிமைகளையும் நீதியையும் பெற்றுத் தருவதற்காக அய்யங்காளி நடத்திய போராட்டங்கள், மாநிலத்தின் வரலாற்றை மாற்றின என்று அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.
ஜனநாயகத்துக்கு ஆபத்து:
அய்யங்காளியின் பிறந்த தினத்தையொட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதல்வா் பினராயி விஜயன், ‘‘சமூகத்தில் உள்ள விளிம்புநிலை மக்கள் மீதான ஒடுக்குமுறைகள் அதிகரித்தால், அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் ஆபத்தை எதிா்கொண்டுள்ளன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
மதம், ஜாதி, பாலினம் உள்ளிட்ட எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது. இதில் யாரும் விதிவிலக்கல்ல’’ என்றாா்.