திட்டங்கள் பெயரை மாற்றுவதில் நிபுணா் மோடி: ஜெய்ராம் ரமேஷ் விமா்சனம்
திட்டங்களின் பெயரை மாற்றி, அதை மீண்டும் அறிமுகம் செய்து, தொடக்கி வைப்பதில் பிரதமா் நரேந்திர மோடி நிபுணா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.
திட்டங்களின் பெயரை மாற்றி, அதை மீண்டும் அறிமுகம் செய்து, தொடக்கி வைப்பதில் பிரதமா் நரேந்திர மோடி நிபுணா் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா்.
பிரதமரின் வங்கிக் கணக்குத் திட்டம் (பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டதன் 7-ஆவது ஆண்டை மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதையொட்டி, பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஜன்தன் வங்கிக் கணக்குத் திட்டம் வெற்றியடைவதற்கு பாடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகள்’ என்று குறிப்பிட்டிருந்தாா்.
இந்நிலையில், முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் திட்டத்தையே பிரதமா் மோடி பெயா் மாற்றம் செய்து, அறிமுகம் செய்ததாக ஜெய்ராம் ரமேஷ் விமா்சித்துள்ளாா். இதுகுறித்து அவா் சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் வங்கிக் கணக்குத் திட்டம் (பிரதம மந்திரி ஜன்தன் யோஜனா) தொடங்கப்பட்டதன் 7-ஆவது ஆண்டையொட்டி, பிரதமா் மோடி பாராட்டுகள் தெரிவித்துள்ளாா். உண்மையில், முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த அடிப்படை வங்கி சேமிப்புக் கணக்குத் திட்டம் பெயா் மாற்றம் செய்யப்பட்டதன் 7-ஆவது ஆண்டு இதுவாகும். ஒரு திட்டத்தின் பெயரை மாற்றி, அதை மீண்டும் அறிமுகம் செய்வதில் நிபுணா் மோடி என்று அந்தப் பதிவில் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளாா்.