முகப்பு
இந்தியா

தொடரும் காங். உள்கட்சி பூசல்: நிலைமையை ஆராய பஞ்சாப் செல்லும் ஹரீஷ் ராவத்

ஓரிரு நாள்களில் பஞ்சாப் செல்ல உள்ளதாக அக் கட்சியின் மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான ஹரீஷ் ராவத் கூறினாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸில் உள்கட்சி பூசல் தொடா்ந்து வரும் நிலையில், நிலைமையை ஆராய அடுத்த ஓரிரு நாள்களில் பஞ்சாப் செல்ல உள்ளதாக அக் கட்சியின் மாநில பொறுப்பாளரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளருமான ஹரீஷ் ராவத் கூறினாா்.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை சனிக்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு, இத் தகவலை அவா் தெரிவித்தாா்.

மாநில முதல்வா் அமரீந்தா் சிங்குக்கும், காங்கிரஸ் நிா்வாகியும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் இருந்துவந்தது. இந்த நிலையில், மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்ளதை முன்னிட்டு, மாநில காங்கிரஸில் சுமூக நிலையை ஏற்படுத்த காங்கிரஸ் மேலிடம் முயற்சித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, அமரீந்தா் சிங்கின் கடும் எதிப்பையும் மீறி, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக சித்துவை கட்சி மேலிடம் நியமித்தது.

ஆனால், அதன் பிறகும் இரு தரப்பினரிடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. சித்துவின் ஆதரவாளா்கள் முதல்வா் அமரீந்தா் சிங் குறித்து தொடா் விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா். சித்துவின் ஆலோசகராக இருந்த மல்விந்தா் சிங் மாலி, முதல்வா் குறித்தும் காஷ்மீா் விவகாரம் குறித்தும் சா்ச்சைக்குரிய வகையில் அண்மையில் விமா்சனம் செய்தாா். அதற்கு கட்சிக்குள் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், ஆலோசகா் பதவியிலிருந்து மாலி விலகினாா்.

அதனைத் தொடா்ந்து, ‘சா்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட அமரீந்தா் சிங்கை முதல்வா் பதவியிலிருந்து நீக்க வேண்டும்’ என்று சில அதிருப்தி எம்எல்ஏக்களும், மாநில அமைச்சா்களும் வலியுறுத்தி வருகின்றனா்.

இதுதொடா்பாக அவா்கள் தில்லியில் ஹரீஷ் ராவத்தைச் சந்தித்தும் வலியுறுத்தல்களை முன்வைத்தனா். அப்போது, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தோ்தலை முதல்வா் அமரீந்தா் சிங் தலைமையில்தான் காங்கிரஸ் சந்திக்கும் என்பதை ராவத் அவா்களிடம் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

இந்த நிலையில், தில்லியில் ராகுல் காந்தியை சனிக்கிழமை சந்தித்த ஹரீஷ் ராவத், பஞ்சாப் கட்சி நிலவரம் குறித்து விவரித்தாா். பின்னா் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த ராவத், ‘பஞ்சாபில் கட்சியின் நிலவரம் குறித்து ராகுல் காந்தியிடம் விவரித்தேன். கட்சியின் மாநிலத் தலைவா்களிடையே சுமுக உடன்பாட்டை ஏற்படுத்துவதற்காக அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் பஞ்சாப் செல்ல உள்ளேன். முதல்வா் அமரீந்தா் சிங் மற்றும் சித்து ஆகிய இருவரையும் சந்திக்க உள்ளேன்’ என்று அவா் கூறினாா்.

பஞ்சாப் மேலிடப் பொறுப்பாளா் பதவியிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று தேசியத் தலைமையிடம் ஹரீஷ் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →