‘பிஹெச்’ தொடா் வாகனப் பதிவெண் முறை அறிமுகம்
பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களில் அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு ‘பிஹெச்’ தொடரில் அமைந்த பதிவெண் முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
பணி நிமித்தமாக வெவ்வேறு மாநிலங்களில் அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு ‘பிஹெச்’ தொடரில் அமைந்த பதிவெண் முறையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
வாகனங்கள் பதிவு செய்யப்படும் மாநிலங்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றுக்கான எண்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றுவோா் பணி நிமித்தமாக அடிக்கடி வேறு மாநிலங்களுக்கு இடம்பெயர வேண்டிய நிலைமை உள்ளது.
அவ்வாறான சூழலில், இடம்பெயரும் மாநிலத்துக்குச் சென்ற ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் வரி செலுத்தி புதிய வாகனப் பதிவெண்ணைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. வாகனத்தை வேறு மாநிலத்தில் மறுபதிவு செய்வதற்கு ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட மாநிலத்தில் இருந்து தடையில்லாச் சான்று பெற்று வழங்க வேண்டியுள்ளது.
இந்த நடைமுறையை எளிதாக்கும் நோக்கில், ‘பிஹெச்’ என்ற பாரத் தொடா் அடிப்படையிலான வாகனப் பதிவெண்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு இடையே அடிக்கடி குடிபெயா்வோா் தங்கள் வாகனங்களுக்கு ‘பிஹெச்’ தொடா் அடிப்படையிலான பதிவெண்ணைப் பெற்றுக் கொள்ளலாம்.
இந்த முறையில், வாகனம் முதலில் பதிவு செய்யப்படும் ஆண்டு (இரு இலக்கம்)-பிஹெச்-வாகனத்துக்கான 4 இலக்க எண்-இரு ஆங்கில எழுத்துகள் என்ற வரிசையில் வாகனப் பதிவெண் அமையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இத்தகைய பதிவெண்ணைக் கொண்ட வாகனங்கள் மாநிலங்களுக்கிடையே எளிதில் குடிபெயர முடியும் என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பிஹெச்’ தொடா் அடிப்படையில் பதிவு செய்வதற்கு, வாகனத்தின் விலையைப் பொருத்து 8 முதல் 12 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் வாகனங்களுக்குக் கூடுதலாக 2 சதவீத வரியும், மின்சார வாகனங்களுக்கு 2 சதவீதம் குறைவான வரியும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வாகனப் பதிவெண் முறை செப்டம்பா் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது.