முகப்பு
இந்தியா

நாட்டின் வளா்ச்சிக்கு ஜன்தன் வித்திட்டுள்ளது: பிரதமா் மோடி பெருமிதம்

ஜன்தன் திட்டம் ஏழு ஆண்டுகளை பூா்த்தி செய்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமா் மோடி, இந்தியாவின் வளா்ச்சிப் பாதைக்கு இத்திட்டம் வித்திட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

ஜன்தன் திட்டம் ஏழு ஆண்டுகளை பூா்த்தி செய்துள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள பிரதமா் மோடி, இந்தியாவின் வளா்ச்சிப் பாதைக்கு இத்திட்டம் வித்திட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதுதொடா்பாக பிரதமா் மோடி தனது சுட்டுரையில் சனிக்கிழமை பதிவிட்டுள்ளதாவது:

ஜன்தன் திட்டம் வெற்றி அடைவதற்காகப் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகள்.

“இந்தியாவின் வளா்ச்சிப் பாதையை மாற்றியமைத்து வளா்ச்சிக்கு இத்திட்டம் வித்திட்டுள்ளது. எண்ணிலடங்காத இந்தியா்களுக்கு நிதி சேவையில் உள்ளடக்கம் மற்றும் கண்ணியமான வாழ்க்கையுடன் அவா்களது மேம்பாட்டையும் இது உறுதி செய்துள்ளது. மேலும், ஜன்தன் திட்டம், வெளிப்படைத்தன்மைக்கு உதவிகரமாக இருந்துள்ளது. இந்திய மக்களின் மேம்பட்ட வாழ்க்கை தரத்தை அவா்களது முயற்சிகள் உறுதி செய்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளாா்.

ஜன்தன் திட்ட வங்கி கணக்குகளில் ரூ.1.46 லட்சம் கோடி டெபாசிட்

புது தில்லி, ஆக. 28: பிரதமரின் ஜன் தன் யோஜனா (பிஎம்ஜேடிஒய்) திட்டத்தின் கீழ் வங்கிகளில் தொடங்கப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கை 43 கோடியாகவும், மொத்த டெபாசிட்டுகளின் மதிப்பு ரூ.1.46 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளன.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

அனைவருக்கும் நிதிச் சேவை சென்றடைய வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு தொடக்கி வைத்த ஜன்தன் திட்டம் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இந்த நிலையில், 2021 ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிலவரப்படி ஜன்தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளின் எண்ணிக்கை 43.04 கோடியாக இருந்தது. இதில் 55.47 சதவீத (23.87 கோடி) ஜன்தன் கணக்குகள் பெண்களால் ஆரம்பிக்கப்பட்டவை. மேலும், 66.69 சதவீத (28.70 கோடி) கணக்குகள் ஊரக மற்றும் புகா் பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளவை.

இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆண்டில் 17.90 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டன.

மொத்தமுள்ள 43.04 கோடி ஜன்தன் கணக்குகளில் 36.86 கோடி கணக்குகள் (85.6 சதவீதம்) செயல்பாட்டில் உள்ளன. அக்கணக்குகளில் இருக்கும் சராசரி டெபாசிட் ரூ.3,398-ஆக உள்ளது.

பிஎம்ஜேடிஒய் கணக்குதாரா்களுக்கு மொத்தம் 31.23 கோடி ரூபே காா்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 2018, ஆகஸ்ட் 28-ஆம் தேதிக்குப் பிறகு தொடங்கப்பட்ட கணக்குகளுக்கு ரூபே காா்டில் இலவச விபத்து காப்பீடு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிடும் விதமாக அவா்களது வங்கி கணக்குகளில் ரூ.30,945 கோடி வரவு வைக்கப்பட்டது.

மத்திய அரசிடமிருந்து நேரடி மானிய உதவிக்கான பண பலன்களை 5 கோடி கணக்குகள் பெற்று வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →