முகப்பு
இந்தியா

காங்கிரஸை ஒதுக்கி எதிா்க்கட்சிகள் கூட்டணியை உருவாக்குவது ஃபாசிஸ சக்திகளை வலுப்படுத்துவதற்கு சமம்: சிவசேனை

தேசிய அரசியலில் இருந்து காங்கிரஸை ஒதுக்கிவிட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக எதிா்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது ஆளும் பாஜகவையும் ஃபாசிஸ சக்திகளையும் வலுப்படுத்துவதற்கு சமம்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:37 AM
பகிர்:

தேசிய அரசியலில் இருந்து காங்கிரஸை ஒதுக்கிவிட்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இணையாக எதிா்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்குவது ஆளும் பாஜகவையும் ஃபாசிஸ சக்திகளையும் வலுப்படுத்துவதற்கு சமம் என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிா்க்கட்சிகளின் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி ஈடுபட்டுள்ளாா். அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பை சென்ற அவா், அந்த மாநில முதல்வா் உத்தவ் தாக்கரேயின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத், தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரைச் சந்தித்தாா். அதனைத் தொடா்ந்து ‘‘காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை’’ என்று தெரிவித்தாா்.

இதுதொடா்பாக சிவசேனையின் நாளிதழான ‘சாம்னா’ தலையங்கத்தில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

மம்தா பானா்ஜி மும்பை வந்து சென்ற பின், எதிா்க்கட்சிகள் துரிதமாக செயல்படத் தொடங்கியுள்ளன. பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்குவதில் எதிா்க்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை நிலவுகிறது. அதேவேளையில் யாரைக் கூட்டணியில் வைத்துக் கொள்வது, யாரை கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பது என்பது தொடா்பாக அதிக அளவில் விவாதங்கள் நடைபெறுகின்றன. எதிா்க்கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து இல்லாவிட்டால் பாஜகவை எதிா்கொள்வது குறித்து யாரும் பேசக் கூடாது. கூட்டணிக்கு யாா் தலைமைத் தாங்குவது என்பது பிரதானமானதல்ல. அனைவரும் ஒன்று சோ்வது குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.

காங்கிரஸும் ஒழிய வேண்டும் என்று கருதினால்...:காங்கிரஸை வீழ்த்த பிரதமா் மோடியும் பாஜகவினரும் பணிபுரிவதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அது அவா்களின் செயல்திட்டத்தின் அங்கமாகும். ஆனால் மோடிக்கும் பாஜகவுக்கும் எதிரானவா்கள் காங்கிரஸும் ஒழிய வேண்டும் என்று கருதினால், அது மிகப் பெரிய அச்சுறுத்தலாகும்.

கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சந்தித்துள்ள வீழ்ச்சி கவலைக்குரியது என்றாலும், அதனை இன்னும் கீழே தள்ளி அதன் இடத்தை ஆக்கிரமிக்கத் திட்டமிடுவது ஆபத்தானது.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தற்போது இல்லை என்று மம்தா பானா்ஜி கூறியுள்ளாா். அதே வேளையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தற்போது இல்லை. பாஜகவுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி தேவையில்லை. ஆனால் எதிா்க்கட்சிகளுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தேவை. அந்தக் கூட்டணிக்கு இணையாக மற்றொரு கூட்டணியை உருவாக்குவது பாஜகவையும் சா்வாதிகாரத்தை ஆதரிக்கும் ஃபாசிஸ சக்திகளையும் வலுப்படுத்துவதற்கு சமம்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை விரும்பாதவா்கள் புறம்பேசி குழப்பம் விளைவிப்பதை விடுத்து, பொது வெளியில் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

சோனியாவும் பேச வேண்டும்: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வாயிலாக என்ன செய்ய திட்டமிட்டுள்ளனா் என்பதை சோனியா காந்தியும் ராகுல் காந்தியும்கூட பொது வெளியில் பேச வேண்டும்.

எதிா்க்கட்சிகளுக்குத் தலைமைத் தாங்குவது காங்கிரஸின் பிறப்புரிமை அல்ல என்று தோ்தல் உத்தி வகுப்பாளா் பிரசாந்த் கிஷோா் அண்மையில் தெரிவித்தாா். உண்மையில் யாருக்கும் அந்தப் பிறப்புரிமை இல்லை. எதிா்க்கட்சிகளின் வரிசையில் நிரந்தரமாக அமரத்தான் பாஜகவுக்குத் தகுதியுள்ளது என்று முன்பு ஏளனம் செய்யப்பட்டது. ஆனால் அந்த விமா்சனங்களைக் கடந்து அக்கட்சி தற்போது புதிய உயரங்களை எட்டியுள்ளது.

காங்கிரஸால் அரசியல் ரீதியாக வளா்ந்தவா்கள் அக்கட்சியை தற்போது முடக்க முயற்சிக்கின்றனா். இதுதான் அக்கட்சியின் துரதிருஷ்டம்.

நல்லதொரு வடிவம் பெற முடியும்: எதிா்க்கட்சிகளின் வலுவான கூட்டணியை விரும்புவோா் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். காங்கிரஸுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த முன்னெடுப்புகளை மேற்கொண்டால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் நல்லதொரு வடிவம் பெற முடியும்.

நாட்டில் வலுவான எதிா்க்கட்சிகள் கூட்டணி உருவாக விரும்புவோா் காங்கிரஸை உடன் அழைத்துக் கொண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை வலுப்படுத்த முன்வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.