முகப்பு
இந்தியா

ஹெலிகாப்டர் எரிந்தபடியே விழுந்ததா? விழுந்து எரிந்ததா?

முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:39 AM
ஹெலிகாப்டர் எரிந்தபடியே விழுந்ததா? விழுந்து எரிந்ததா?
பகிர்:

குன்னூர்: முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. 

விபத்து நடந்தது எப்படி, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரின் வகை குறித்த பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விபத்தில் சிக்கிய விமானப் படை ஹெலிகாப்டரில் முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் பயணித்ததாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

Advertisement

இந்த ஹெலிகாப்டர், எப்படி விபத்துக்குள்ளானது என்பது குறித்து நேரில் பார்த்தவர்கள் அளிக்கும் தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

முதலில் கிடைத்த தகவலின்படி, பனிமூட்டம் காரணமாக தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர், மரத்தில் மோதி நிலைதடுமாறி கீழே தலைக்குப்புற விழுந்ததாகவும், பிறகு அதில் தீப்பற்றியகக் கூறப்பட்டது. 

இதற்கிடையே,  தீப்பிடித்து எரிந்தபடி ஹெலிகாப்டர் விழுந்தை நேரில் பார்த்ததாகவும் சிலர் கூறியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குன்னூர் அருகே முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய நிகழ்வில் அந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தபடியே கீழே விழுந்ததாக உள்ளூர்வாசிகள் தற்போது தெரிவித்துள்ளனர். வானில் தீப்பிழம்புடன் எரிந்தபடி ஹெலிகாப்டர் வானத்திலிருந்து மரத்தின் மீது விழுந்ததாக உள்ளூர்வாசிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால் ஹெலிகாப்டர் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விழுந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

முன்னதாக, விபத்து நிகழ்ந்த இடத்திலிருந்து, ஹெலிகாப்டர் விபத்து எப்படி நடந்திருக்கலாம் என்பது குறித்து வெளியான தகவல்கள் இதற்கு நேர்மாறாக இருந்தன. 

அதாவது, விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டரில், முப்படை தலைமை தளபதி விபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் பயணித்துள்ளனர். ஹெலிகாப்டர் சூலூரிலிருந்து வெலிங்டனுக்கு முற்பகல், 11.47 மணிக்கு புறப்பட்டுள்ளது.

இது 12.20 மணிக்கு குன்னூர் அருகே அடர்ந்த வனப்பகுதிக்கு மேலே பறந்தபோது, அப்பகுதியில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டதால், ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்திருக்கக் கூடும். இதன் காரணமாக, ஹெலிகாப்டர், உயரமான மரத்தில் மோதி கீழே விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஹெலிகாப்டர் கீழே விழுந்த வேகத்தில், அதிலிருந்த எரிபொருள் வெளியேறி தீப்பற்றியதில், ஹெலிகாப்டர் சுமார் ஒன்றரை மணி நேரம் எரிந்திருக்கிறது. விபத்து நிகழ்ந்தப் பகுதி மலைப்பகுதி என்பதால், அவ்விடத்துக்கு தீயணைப்புத் துறையினர் வருவதற்கு சிரமம் ஏற்பட்டது. இதற்கிடையே அப்பகுதியிலிருந்த பொதுமக்கள், கைகளில் கிடைத்தப் பாத்திரங்களிலெல்லாம் தண்ணீரைப் பிடித்து தீயை அணைக்க முற்பட்டுள்ள காட்சிகளையும் காண முடிந்தது. ராணுவத்தினரும், காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டர் மரத்தில் மோதி கீழே விழுந்தது. ஆனால், உடனே ஹெலிகாப்டரில் தீப்பற்றியதால்தான் நிலைமை மோசமடைந்தது என்று கூறியிருந்தார்.

இந்த விபத்தில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 5 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை வெலிங்டன் ராணுவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக, கோவையிலிருந்து இரண்டு ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஹெலிகாப்டர்களில் ஒன்றுதான் குன்னூர் அருகே புதன்கிழமை விபத்தில் சிக்கியது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments