ஒமைக்ரான்: தொடர்பிலிருந்தவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைப்பு
கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா இருப்பது கண்டறியப்பட்ட மருத்துவரிடம் தொடர்பிலிருந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட மருத்துவரிடம் தொடர்பிலிருந்தவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கர்நாடகத்தில் 46 வயதுடைய மருத்துவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவருடன் தொடர்பிலிருந்தவர்களும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், மருத்துவருடன் தொடர்பிலிருந்தவர்கள் வீடு திரும்பிய நிலையில், மீண்டும் மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
"மருத்துவருடன் தொடர்பிலிருந்த மற்ற மூன்று மருத்துவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் தொற்று பாதிப்பு இல்லை என்பது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் வீடு திரும்பினர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான்: மகாராஷ்டிரத்தின் முதல் நபர் குணமடைந்து வீடு திரும்பினார்
இதையடுத்து, அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்குத் திரும்ப அழைக்கப்பட்டனர். இரண்டு முறை தொற்று பாதிப்பு இல்லை என்பது உறுதி செயய்ப்பட்டவுடனும் கரோனா வார்டில் எங்களால் இருக்க முடியாது என அந்த மூன்று மருத்துவர்களும் தெரிவித்திருக்கின்றனர். மேலும், தங்களது குடும்பத்தினருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால், அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
இருந்தபோதிலும், அவர்கள் மருத்துவமனைக்குத் திரும்ப அழைக்கப்பட்டு மருத்துவமனையில் வேறு ஒரு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவருடன் தொடர்பிலிருந்தவ மூவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோதிலும், அவர்கள் மருத்துவமனையைவிட்டு வெளியேறவில்லை என மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஒமைக்ரான் பாதிப்புடையவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களை வீட்டுக்கு அனுப்புவது குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால், அதில் இன்னும் குழப்பம் நிலவுவதாகவும் மருத்துவமனை அதிகாரிகள் கூறிகின்றனர்.
ஒமைக்ரான் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ள நபர்களை வீட்டுக்கு அனுப்புவது குறித்து வல்லுநர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கிடையே இதில் இரண்டு வெவ்வேறு கருத்துகள் உள்ளன. சிலர் நோயாளிக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாமல், தனிமைக் காலம் 14 நாள்களைக் கடந்துவிட்டு தொற்று பாதிப்பு இல்லை என்பதை ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில் இரண்டு முறை உறுதி செய்யப்பட்டால் வீடு திரும்பலாம் என சில வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும், மரபணு பரிசோதனை முடிவுகள் வரும் வரை அவர்களை வீட்டுக்கு அனுப்பக் கூடாது என சிலர் கூறுகின்றனர்.
இவர்கள் மூவரையும் வீட்டுக்கு அனுப்புவது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்."