முகப்பு
இந்தியா

18 வயதில் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, இணையரை தேர்ந்தெடுக்கக் கூடாதா? ஓவைசி கேள்வி

இதை விமரிசித்துள்ள மக்களவை உறுப்பினர் ஓவைசி. 18 வயதில் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, திருமணம் செய்யக் கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:43 AM
கோப்புப்படம்
பகிர்:

பெண்களின் திருமண வயது உயர்த்தப்படுவது குறித்து பரிசீலனை செய்துவருவதாக பிரதமர் மோடி கடந்தாண்டு தெரிவித்திருந்தார். இதையடுத்து, பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21ஆக உயர்த்தும் முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதுகுறித்த சட்ட திருத்தம் இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், இந்த முடிவை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ள நிலையில், ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த வகையில், இதை விமரிசித்துள்ள மக்களவை உறுப்பினர் ஓவைசி. 18 வயதில் பிரதமரை தேர்ந்தெடுக்கும்போது, திருமணம் செய்யக் கூடாதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர், "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் ஆணாதிக்க போக்குக்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 18 வயதில், ஒரு இந்திய குடிமகன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம், தொழில் தொடங்கலாம், பிரதமர்களை தேர்வு செய்யலாம். எம்பி மற்றும் எம்எல்ஏக்களை தேர்ந்தெடுக்கலாம். ஆண்களுக்கான 21 வயது வரம்பை 18 ஆக குறைக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். 

இந்தியாவில் குழந்தை திருமணம் குறைந்துள்ளது குற்றவியல் சட்டத்தால் அல்ல, மாறாக கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றம் காரணமாகத்தான். இருந்த போதிலும், ஏறக்குறைய 12 மில்லியன் குழந்தைகளுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுவதாக அரசு தரப்பு கூறியுள்ளது. பெண்களின் முன்னேற்றத்திற்காக இந்த அரசு எதையும் செய்யவில்லை. 2005ல் 26 சதவீதம் பெண்கள் பணியில் இருந்துள்ளனர். இது, 2020ல் 16 சதவீதமாக குறைந்துள்ளது.

தரவுப் பாதுகாப்பு மசோதாவில், தரவைப் பகிர உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களால் ஒரு இணையரை தேர்ந்தெடுக்க முடியாது. இது என்ன தர்க்கம் இருக்கிறது? அதனால்தான் இது தவறான நடவடிக்கை என்று நான் உணர்கிறேன். என்னுடைய கருத்துப்படி, 21 வயதில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உரிமை வழங்கப்பட வேண்டும். 

இப்போது தனியுரிமை என்பது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்றம் கூட கூறியுள்ளது. யாரை திருமணம் செய்வது என்பதை ஒருவர் தேர்வு செய்யலாம், எப்போது குழந்தை பெற வேண்டும் என்பதை ஒருவர் தேர்வு செய்யலாம். பெண்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த அரசு கணிசமாக எதையும் செய்யவில்லை

அமெரிக்காவில் பல மாகாணகளில் 14 வயதுக்கு பிறகே திருமணம் அனுமதிக்கப்படுகிறது. பிரிட்டன் மற்றும் கனடாவில், 16 வயதில் திருமணம் செய்து கொள்ள உரிமை உள்ளது" என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →