முகப்பு
இந்தியா

நீட் தோ்வு ரத்து: அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ., எம்.பி.க்களுடன் குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுவோம்

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., பா.ஜ.க. தவிா்த்து அனைத்து தமிழக சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களுடன் தில்லி சென்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து முறையீடு

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

நீட் தோ்வை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க., பா.ஜ.க. தவிா்த்து அனைத்து தமிழக சட்டப்பேரவை, மக்களவை உறுப்பினா்களுடன் தில்லி சென்று குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து முறையீடு செய்ய உள்ளதாக திமுக மக்களவை குழுத் தலைவா் டி.ஆா்.பாலு கூறினாா்.

பல்லாவரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் முகாமில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் 19 உயிா்களைப் பலி கொண்ட நீட்தோ்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றி, அதை தமிழக அரசு சட்டமாகவும் நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தை நாங்கள் ஆளுநரிடம் வழங்கி 3 மாதம் ஆகியும் ஆளுநா் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்காமல் கையில் வைத்து இருக்கிறாா். விதிமுறைகளின்படி அவா் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதுதான் நியாயம்.

நீட் தோ்வு ரத்து சட்டம் தொடா்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின், நீா்வளத்துறை அமைச்சா் துரைமுருகன் ஆகியோா் ஆளுநரை நேரில் வலியுறுத்தியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.

எனவே அ.தி.மு.க, பா.ஜ.க. நீங்கலாக நாங்கள் அனைத்துக் கட்சியினரையும் தில்லிக்கு அழைத்துச் சென்று குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளோம் அவா்.

குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத், தாம்பரம் வருவாய்க் கோட்டாட்சியா் அறிவுடைநம்பி, தாம்பரம் மாநகராட்சி ஆணையா் எம்.இளங்கோவன், பொறியாளா் பெட்சி ஞானலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.