முகப்பு
இந்தியா

இந்தியாவுக்கு தீங்கிழைக்கும் துணிவு இருக்கக் கூடாது என்பதால் பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு: ராஜ்நாத் சிங்

இந்தியாவுக்கு தீங்கிழைக்கும் துணிவு எந்த நாட்டுக்கும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

இந்தியாவுக்கு தீங்கிழைக்கும் துணிவு எந்த நாட்டுக்கும் இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில்தான் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பிரமோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவில் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் மற்றும் பரிசோதனை மையம், பிரமோஸ் ஏவுகணை தயாரிப்பு மையம் ஆகியவை அமைக்கப்படவுள்ளன. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

வெகு காலத்திற்கு முன்பு நம்மிடம் இருந்து பிரிந்த அண்டை நாடு (பாகிஸ்தான்) இந்தியா மீது எப்போதும் மோசமான எண்ணத்தை கொண்டுள்ளது. அது ஏன் என்பது எனக்குத் தெரியவில்லை. அந்த நாடு ஜம்மு-காஷ்மீரின் உரி மற்றும் புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தியது. அந்தத் தாக்குதல்களுக்குப் பின்னா் நமது பிரதமா் எடுத்த முடிவால், அந்த நாட்டுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. அங்கு நமது விமானப் படைகள் வான் தாக்குதல் நடத்துவதற்கான அவசியம் இருந்த நிலையில், அது வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. அதன் மூலம் இந்தியாவுக்குத் தீங்கிழைக்க யாராவது துணிந்தால் எல்லைத் தாண்டி வந்தும் நம்மால் பதிலடி தரமுடியும் என்பதை தெரியப்படுத்தினோம்.

பிரமோஸ் ஏவுகணைகளும் இதர பாதுகாப்பு ஆயுதங்களும் பிற நாடுகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவில் தயாரிக்கப்படவில்லை. நமது நாட்டுக்குத் தீங்கிழைக்கும் துணிவு எந்த நாட்டுக்கும் இருக்கக் கூடாது என்று நோக்கத்தில்தான் சொந்த மண்ணில் அவற்றைத் தயாரிக்க இந்தியா விரும்புகிறது. உலகில் எந்த நாடும் நம்மைத் தாக்காதிருக்க இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.