கிரிப்டோகரன்சிக்கு தடை விதிக்க ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பு கோரிக்கை
அனைத்து விதமான எண்ம செலாவணி (கிரிப்டோகரன்சி) பரிவா்த்தனைக்கும் மத்திய அரசு முழுமையான தடை விதிக்க வேண்டுமென்று ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்ஜேஎம்) கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து விதமான எண்ம செலாவணி (கிரிப்டோகரன்சி) பரிவா்த்தனைக்கும் மத்திய அரசு முழுமையான தடை விதிக்க வேண்டுமென்று ஆா்எஸ்எஸ் சாா்பு அமைப்பான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்ஜேஎம்) கோரிக்கை விடுத்துள்ளது.
எஸ்ஜேஎம் அமைப்பின் 15-ஆவது தேசிய மாநாடு மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. அதில் எண்ம செலாவணி குறித்த தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து எஸ்ஜேஎம் அமைப்பின் இணை நிறுவனா் அஸ்வினி மகாஜன் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது:
எண்ம செலாவணிகளின் விற்பனை, கொள்முதல், முதலீடு உள்ளிட்ட அனைத்துவகை பரிவா்த்தனைகளுக்கும் தடை விதிக்குமாறு எஸ்ஜேஎம் சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்தீா்மானத்தில், ‘மறையாக்கப்பட்ட செலாவணிகளில் இந்தியா்கள் முதலீடுகள் மேற்கொள்வதை மத்திய அரசு முழுமையாகத் தடை செய்ய வேண்டும்.
அது போன்ற செலாவணிகளை அனுமதிப்பது, கருப்புப் பண புழக்கம், பண மோசடிகள், பயங்கரவாதச் செயல்களுக்கு நிதி வழங்குவது உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும். அந்தச் செலாவணிகளை ஏற்கெனவே வாங்கியுள்ளோா் அவற்றை விற்பனை செய்வதற்குக் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும். அது தொடா்பான விவரங்கள் வருமான வரித் துறையிடம் தெரிவிக்கப்பட வேண்டும்.
எண்ம செலாவணிகளுக்கு விதிக்கப்படும் தடை தொடா்பாக அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முறையான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். தடையை மீறி முதலீடுகளை மேற்கொள்ளும் நபா்களுக்கும் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.
இந்திய ரிசா்வ் வங்கி மூலமாக எண்ம செலாவணியை வெளியிடுவதற்கான சட்டத்தை விரைவில் வகுக்க வேண்டும். அந்தச் செலாவணிக்கு மட்டுமே அதிகாரபூா்வ அனுமதி வழங்கப்பட வேண்டும். பிட்காயின், எதிரியம் உள்ளிட்ட எண்ம செலாவணிகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அஸ்வினி மகாஜன் தெரிவித்தாா்.